2-வது அலை பரவும் அபாய நிலையில் சாலையில் சிதறி கிடந்த கொரோனா கவச உடைகள் நாகையில் பரபரப்பு


2-வது அலை பரவும் அபாய நிலையில் சாலையில் சிதறி கிடந்த கொரோனா கவச உடைகள் நாகையில் பரபரப்பு
x
தினத்தந்தி 20 March 2021 3:08 PM GMT (Updated: 20 March 2021 3:08 PM GMT)

கொரோனா 2-வது அலை பரவும் அபாயம் நிலையில் நாகை சாலையில் கொரோனா கவச உடைகள் சிதறி கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாகப்பட்டினம்:-
கொரோனா 2-வது அலை பரவும் அபாயம் நிலையில் நாகை சாலையில் கொரோனா கவச உடைகள் சிதறி கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

2-வது அலை அபாயம்

ஒரு ஆண்டுக்கு மேலாக உலக மக்களிடையே மரண பீதியை ஏற்படுத்தி வருகிறது கொரோனா வைரஸ். பல ஆயிரம் உயிர்களை பலி வாங்கி விட்ட கொரோனா வைரசில் இருந்து தற்காத்து கொள்ள உலக நாடுகள் அன்றாடம் போராடி வருகின்றன. முககவசம் அணிவது, சானிடைசர் பயன்படுத்துவது, கைகளை சோப்பு போட்டு கழுவுவதில் ஒவ்வொருவரும் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்தியாவில் கொரோனாவுக்கு தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. ஆனாலும் தற்காப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடும்படி மத்திய அரசு, மாநில அரசுகளை வலியுறுத்தி வருகிறது. 
அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் கொரோனா பரவுவது கட்டுபடுத்தப்பட்டு இருந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை பரவும் அபாயம் இருப்பதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

அபராதம்

இதையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவும் வகையில் அலட்சியமாக செயல்பட்டதாக கல்வி நிறுவனங்களுக்கு மாவட்ட நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது. 
கொரோனா 2-வது அலையின் அச்சம் பொதுமக்கள் மத்தியில் இருக்கின்ற நிலையில் நாகையில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க டாக்டர் குழுவினர் பயன்படுத்தும் கவச உடைகள் சாலையில் சிதறி கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கொரோனா கவச உடை

நாகை நீலா மேலவீதி பகுதியில் கொரோனா கவச உடையை சிலர் அலட்சியமாக சாலையின் ஓரமாக உள்ள குப்பை தொட்டியில் வீசி சென்றுள்ளனர். இவ்வாறு வீசி சென்ற கவச உடைகள் காற்றில் பறந்து சாலையில் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. இதனை நாய்கள் கடித்துக்குதறி உள்ளன. 
அந்த வழியாக சென்ற மனநலம் பாதிக்கப்பட்ட சிலர் அந்த கவச உடைகளை வேறு தெருவில் வீசி சென்றுள்ளனர். இதனால் அந்த பகுதியில் கொரோனா கவச உடைகள் ஆங்காங்கே சிதறி கிடப்பதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. 

பொதுமக்கள் எதிர்பார்ப்பு

ஒருவர் பயன்படுத்திய முககவசத்தை மற்றொருவர் பயன்படுத்த கூடாது. அதே போல் பயன்படுத்திய முககவசத்தை கண்ட இடங்களில் வீசி விட்டு செல்ல கூடாது என சுகாதாரத்துறையினர் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள். 
இந்த நிலையில் நாகையில் கொரோனா வைரஸ் தொற்று கவச உடைகளை சாலையில் வீசி சென்றவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Next Story