மேட்டுப்பாளையம் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் உள்பட 180 வேட்பு மனுக்கள் தள்ளுபடி


மேட்டுப்பாளையம் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் உள்பட 180 வேட்பு மனுக்கள் தள்ளுபடி
x
தினத்தந்தி 20 March 2021 7:26 PM GMT (Updated: 2021-03-21T01:02:56+05:30)

கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளரின் மனு உள்பட 180 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 137 மனுக்கள் ஏற்கப்பட்டன.

கோவை,

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி கடந்த 12-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியிலும், உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொண்டாமுத்தூர் தொகுதியிலும் போட்டியிட வேட்புமனு அளித்தனர்.

 கோவை மாவட்டம் முழுவதும் 317 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் மீதான பரிசீலனை அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 

இதில் வேட்பாளர்கள் மற்றும் அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர். வேட்பு மனு பரிசீலனையை தேர்தல் பொதுப்பார்வையாளர்கள் கண் காணித்தனர். வேட்பு மனு பரிசீலனையின் போது மேட்டுப்பாளையம் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளரின் மனு உள்பட 180 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன 137 மனுக்கள் ஏற்கப்பட்டன.

இது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது

மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க., மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் உள்பட 26 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். 

மேட்டுப்பாளையம் சட்ட மன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி குமரேசன் தலைமையில் வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது. இதில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் என்.ராஜ்குமாரின் வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி தள்ளுபடி செய்தார்.

அவர் தாக்கல் செய்த வேட்பு மனு படிவம் 2பி- பகுதி ஒன்றில் அங்கீக ரிக்கப்பட்ட அரசியல் கட்சியால் நிறுத்தி வைக்கப்படும் வேட்பாளரின் பயனுக்கானது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் மக்கள் நீதி மையம் கட்சி தேர்தல் ஆணையத்தால் இன்னும் அங்கீகரிக்கப்படாத நிலையில் பூர்த்தி செய்துள்ளார். 

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள் தான் பகுதி ஒன்றில் பூர்த்தி செய்ய வேண்டும். மேலும் பகுதி 2-ல் சுயேச்சை வேட்பாளர்கள் மட்டும் பயன்படுத்த வேண்டும். பகுதி 2-லும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் ராஜ்குமார் பூர்த்தி செய்துவிட்டார்.

எனவே வேட்புமனுவை பூர்த்தி செய்ததில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அந்த தொகுதியில் மொத்தம் 36 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதில் 25 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 11 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

கோவை தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பு மனு பரிசீலனை தேர்தல் நடத்தும் அதிகாரி செந்தில் அரசன் தலைமையில் நடைபெற் றது. இதில் தி.மு.க. நிர்வாகிகள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனுவில் சொத்து விவரங்கள் சரியாக குறிப்பிடப்பட வில்லை. 

எனவே அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அவர்கள் கூறினர். இதற்கு அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. வேட்பு மனுக்களை பரிசீலனை செய்த பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 

அந்த தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கார்த்திகேய சேனாபதி, நடிகர் மன்சூர் அலிகான் வேட்பு மனு உள்பட 10 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப் பட்டன. 29 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

கோவை வடக்கு தொகுதியில் மொத்தம் 35 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான பரிசீலனை தேர்தல் நடத்தும் அதிகாரி முருகேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன், தி.மு.க. வேட்பாளர் வ.ம.சண்முகசுந்தரம் உள்பட 21 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 14 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், பா.ஜனதா வேட்பாளர் வானதி சீனிவாசன், காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் உள்பட மொத்தம் 33 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான பரிசீலனை தேர்தல் அதிகாரி சிவ சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது.

 இதில் புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் மாசானமுத்துவின் மனு உள்பட 12 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. கமல்ஹாசன் உள்பட 21 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
சிங்காநல்லூர் சட்ட மன்ற தொகுதியில் மொத்தம் 38 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. இந்த மனுக்கள் மீதான பரிசீலனை தேர்தல் அதிகாரி ராம்குமார் தலைமையில் நடைபெற்றது. 

இதில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.ஜெயராம், தி.மு.க. வேட்பாளர் நா.கார்த்திக், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மகேந்திரன் உள்பட 17 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 21 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

சூலூர் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 25 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை தேர்தல் அதிகாரி சாந்தி தலைமையில் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. வேட்பாளர் வி.பி.கந்தசாமி, கொ.ம.தே.க. வேட்பாளர் பிரீமியர் செல்வம் உள்பட மொத்தம் 16 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப் பட்டன. 9 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
கோவை கவுண்டம்பாளையத்தில் மொத்தம் 25 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. 

இந்த மனுக்கள் மீதான பரிசீலனை தேர்தல் அதிகாரி ரவிசந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார், தி.மு.க. வேட்பாளர் பையா கவுண்டர், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பங்கஜ் ஜெயின் ஆகியோரின் மனுக்கள் உள்பட 12 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 15 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 317 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. இதில் 137 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 180 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஒரு சில வேட்பாளர்கள் 4 மனுக்கள் வரை தாக்கல் செய்திருந்தனர். இதில் ஒரு மனு மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மீதம் உள்ள மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story