டிக்-டாக்கில் பழகி காதல் திருமணம் செய்த கணவருடன் தகராறு: புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


டிக்-டாக்கில் பழகி காதல் திருமணம் செய்த கணவருடன் தகராறு: புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 20 March 2021 8:37 PM GMT (Updated: 2021-03-21T02:07:10+05:30)

சங்ககிரி அருகே டிக்-டாக்கில் பழகி காதல் திருமணம் செய்த கணவருடன் ஏற்பட்ட தகராறால் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சங்ககிரி:
சங்ககிரி அருகே டிக்-டாக்கில் பழகி காதல் திருமணம் செய்த கணவருடன் ஏற்பட்ட தகராறால் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
டிக்-டாக் பழக்கம்
சென்னை விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் தரணி (வயது 36). இவருக்கு திருமணமாகி சுவேதா (20), பிரியதர்ஷினி (19) என்ற மகள்களும், மணிகண்டன் என்ற மகனும் உள்ளனர். தரணி கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் முனியாண்டியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தார். கொரோனா வைரஸ் பரவி வந்த காலகட்டத்தில் பிரியதர்ஷினி 11-ம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். 
இந்த நிலையில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பிருதனபள்ளி பகுதியை சேர்ந்த குருநாதன் என்பவருடன் டிக்-டாக் மூலம் அறிமுகம் ஏற்பட்டு இருவரும் பழகி வந்தனர். இந்த நிலையில் தரணி தனது குடும்பத்துடன் திருப்பதி கோவிலுக்கு சென்றார். அப்போது ஊரடங்கு அறிவித்து விட்டதால் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பிருதனபள்ளி குருநாதன் வீட்டுக்கு சென்று தங்கி கொண்டனர். 
காதல் திருமணம்
கடந்த 7 மாதமாக அங்கே இருந்தனர். இந்த நிலையில் தரணியின் மூத்த மகள் சுவேதா குருநாதனின் அண்ணன் அருண்குமாரை திருமணம் செய்து கொண்டார். இளைய மகள் பிரியதர்ஷினி குருநாதனை காதலித்து வந்தார். இதையடுத்து தாய், மகள் மற்றும் குருநாதன் ஆகிய 3 பேரும் சேலம் மாவட்டம் சங்ககிரிக்கு வந்தனர். அங்கு ஐயங்காட்டூர் செல்வராஜ் என்பவர் வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தனர். 
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஆந்திர மாநிலத்திற்கு மீண்டும் சென்று பிரியதர்ஷினியின் திருமணத்தை நடத்தினர். பின்னர் மீண்டும் சங்ககிரி வந்து பிரியதர்ஷினியும், குருநாதனும் தனிகுடித்தனம் நடத்தினர். குருநாதன் சங்ககிரி லாரி பட்டறையில் வேலை செய்து வந்துள்ளார். 
இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டது. அதனால் மனமுடைந்து நேற்று மாலை பிரியதர்ஷினி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து பிரியதர்ஷினி தாயார் தரணி சங்ககிரி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story