கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 6 தொகுதிகளில் அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் உள்பட 102 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு - 57 மனுக்கள் தள்ளுபடி


கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 6 தொகுதிகளில் அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் உள்பட 102 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு - 57 மனுக்கள் தள்ளுபடி
x
தினத்தந்தி 21 March 2021 1:24 AM GMT (Updated: 2021-03-21T06:58:15+05:30)

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 தொகுதிகளில் அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் உள்பட 102 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்று கொள்ளப்பட்டன. இதைத் தவிர 57 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை (தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஓசூர், தளி ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு வருகிற ஏப்ரல் மாதம் 6-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 12-ந் தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது.

வேட்பு மனு தாக்கல் மீதான பரிசீலனை அந்தந்த சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட தாசில்தார் அலுவலகம், உதவி கலெக்டர் அலுவலகங்களில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் நேற்று நடந்தது. இதில் ஒவ்வொரு மனுவாக பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. அதில் ஏற்றுக் கொள்ளப்பட்ட மனுக்கள் மற்றும் தள்ளுபடி செய்யப்பட்ட மனுக்கள் அதற்கான காரணங்கள் குறித்து வேட்பாளர்களுக்கு எடுத்து கூறப்பட்டன.

அதன்படி ஊத்தங்கரை தொகுதியில் போட்டியிட வேட்பாளர்கள் 21 மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இதில் கூடுதலாக அளிக்கப்பட்ட மனுக்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுக்கான மாற்று வேட்பாளர்களின் மனுக்கள் என 6 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அ.தி.மு.க, காங்கிரஸ், தே.மு.தி.க. வேட்பாளர்கள் உள்பட 15 மனுக்கள் ஏற்கப்பட்டன.

பர்கூர் தொகுதியில் போட்டியிட வேட்பாளர்கள் 30 மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இதில் 2 சுயேச்சை வேட்பாளர்கள், கூடுதலாக அளிக்கப்பட்ட மனுக்கள், அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளர்களுக்கான மாற்று வேட்பாளர்களின் மனுக்கள் என 12 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் உள்பட 18 பேரின் மனுக்கள் ஏற்று கொள்ளப்பட்டன.

கிருஷ்ணகிரியில் தொகுதியில் போட்டியிட வேட்பாளர்கள் சார்பில் 28 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அதில் கூடுதலாக அளிக்கப்பட்ட மனுக்கள், மாற்று வேட்பாளர்களின் மனுக்கள் என 13 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் உள்பட 15 பேரின் மனுக்கள் ஏற்று கொள்ளப்பட்டன. வேப்பனப்பள்ளி தொகுதியில் போட்டியிட வேட்பாளர்கள் சார்பில் 36 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அதில் 16 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, அ.தி.மு.க., தி.மு.க. உள்பட 20 பேரின் மனுக்கள் ஏற்று கொள்ளப்பட்டது.

ஓசூர் தொகுதியில் போட்டியிட 27 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இதில் கூடுதலாக அளிக்கப்பட்ட மனுக்கள், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் மாற்று வேட்பாளர்களின் 7 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் உள்பட 20 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. தளி தொகுதியில் போட்டியிட வேட்பாளர்கள் 17 மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இதில், 3 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்திய கம்யூனிஸ்டு, பா.ஜனதா, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட 14 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டது.
அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதிகளிலும் 159 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதில், பரிசீலனையின் போது 57 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 102 பேரின் மனுக்கள் ஏற்று கொள்ளப்பட்டது.

Next Story