தூத்துக்குடியில் த.மா.கா. வேட்பாளர் தீவிர வாக்குசேகரிப்பு


தூத்துக்குடியில் த.மா.கா. வேட்பாளர் தீவிர வாக்குசேகரிப்பு
x
தினத்தந்தி 21 March 2021 3:32 PM GMT (Updated: 21 March 2021 3:32 PM GMT)

தூத்துக்குடியில் த.மா.கா. வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் அ.தி.மு.க கூட்டணி த.மா.கா வேட்பாளர் எஸ்.டி.ஆர். விஜயசீலன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
எஸ்.டி.ஆர்.விஜயசீலன் பிரசாரம்
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில், அந்த கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் போட்டியிடுகிறார். இவர் தொகுதி முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். 
திறந்த ஜீப்பில் சென்றும், வீதி, வீதியாக நடந்து சென்றும் பொதுமக்களை சந்தித்து ஓட்டு சேகரித்து வருகிறார். பிரசாரத்துக்கு செல்லும் இடங்களில் மக்கள் ஆரத்தி எடுத்தும், மாலைகளை அணிவித்தும் வரவேற்பு அளித்தனர்.
நேற்று காலையில் த.மா.கா. வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் முத்தையாபுரத்தில் பிரசாரத்தை தொடங்கினார். 
தொடர்ந்து அவர், ஏ.வி.எஸ். பள்ளி முன்பு, தோப்பு தெரு சந்திப்பு, அய்யன்கோவில் தெரு, பல்க் சந்திப்பு, தங்கம்மாள்புரம், சூசைநகர், சுந்தரம் நகர் விநாயகர் கோவில், ஸ்பிக் குடியிருப்பு, முள்ளக்காடு, பொட்டல்காடு, வீரநாயக்கன் தட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏராளமான பொதுமக்கள் அவருக்கு வழிநெடுகிலும் ஆரத்தி எடுத்தும், பட்டாசு வெடித்தும், மலர் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிரசாரத்தில் த.மா.கா. வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் பேசியதாவது:-
மீனவர்களுக்கு நிவாரணத்தொகை
மீனவர்கள் அனைவருக்கும் மீன்பிடி தடைக்கால நிவாரணத்தொகை கிடைக்கவும், மீனவர்களின் சங்கத்துடன் இணைந்து அதில் ஏற்படும் சிரமங்களை தவிர்க்க தொழில்நுட்ப உதவி செய்யவும் நடவடிக்கை எடுப்பேன். தொழில் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நீரை கடல் நீரில் இருந்து மட்டுமே உபயோகிக்க வழிவகை செய்யப்படும்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அந்தந்த பகுதி மக்களை கலந்து ஆலோசித்து மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். 
வார்டுகளுக்கு ஒரு மேற்பார்வையாளரை தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பணியமர்த்தி தூய்மையான தூத்துக்குடியை உருவாக்க நடவடிக்கை எடுப்பேன். தூத்துக்குடியில் நிலத்தடி நீரின் தன்மையை குறைக்கும் வகையில், நகரை சுற்றி உள்ள குளங்கள் தூர்வாரப்பட்டு நீரை பெருக்க வழிவகை செய்யப்படும். பனை பொருட்களை சந்தைப்படுத்தி விற்பனை செய்ய பெரிய அளவிலான விற்பனைக்கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ஏழை, எளிய மக்களுக்கு ஏற்றமிகு பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. 
அதில், அம்மா சீர்வரிசை திட்டம் மூலம் ஏழை தம்பதிகளின் அழகி பட்டாடை வெள்ளிக் கொலுசு வீட்டு உபயோக பொருட்கள் வழங்கப்படும். அனைத்து ரேஷன்கார்டுதாரர்களுக்கும் ரேஷன் பொருட்கள் வீடுதேடி வரும், மாணவர்களுக்கு தற்போது நாளொன்றுக்கு வழங்கப்படும் 2 ஜி.பி. இலவச டேட்டா இனி ஆண்டு முழுவதும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 
இந்த திட்டங்கள் தூத்துக்குடி தொகுதி மக்களுக்கு முழுமையாக கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன் என்று கூறினார்.
பிரசாரத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் கதிர்வேல், தென்மண்டல அ.தி.மு.க செயலாளர் ராமகிருஷ்ணன், முள்ளக்காடு கிளைச் செயலாளர் கண்ணன், முன்னாள் பஞ்சாயத்து துணைத் தலைவர் பால்ராஜ், பா ஜனதா மாவட்ட தலைவர் பால்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஆலோசனை கூட்டம்
தொடர்ந்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் ஆலோசனையின் பேரில், தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அ.தி.மு.க வார்டு செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட துணை செயலாளர் சந்தனம் தலைமை தாங்கினார். முன்னாள் வாரியத்தலைவர் அமிர்த கணேசன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் கலந்து கொண்டு தேர்தல் பணி குறித்தும், தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வது தொடர்பாகவும் நிர்வாகிகளிடம் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி செயலாளர் வீரபாகு, இளைஞர் பாசறை செயலாளர் தனராஜ், அண்ணா தொழிற்சங்க தலைவர் ராஜா, சிறுபான்மை அணி செயலாளர் பிரபாகர், மகளிரணி செயலாளர் குருத்தாய் மற்றும் வட்ட செயலாளர்கள், பகுதி செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story