தேர் சீலைகள் கட்டும் பணி மும்முரம்


தேர் சீலைகள் கட்டும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 21 March 2021 6:25 PM GMT (Updated: 2021-03-21T23:55:35+05:30)

திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்ட விழாவையொட்டி தேர் சீலைகள் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

திருவாரூர்:
திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்ட விழாவையொட்டி தேர் சீலைகள் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 
தியாகராஜர் கோவில்
சைவ சமயத்தின் தலைமை பீடமாக திருவாரூர் தியாகராஜர் கோவில் விளங்குகிறது. சர்வதோஷ பரிகார தலமாகவும், பிறந்தாலும், பெயர் சொன்னாலும் முக்தி அளிக்கும் தலமாகவும் திகழ்கிறது. ஆசியாவிலே மிகப்பெரிய தேராக ஆழித்தேர் என்கிற சிறப்புக்குரியது. பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்ட விழா நடைபெறுவது வழக்கம். 
கடந்த ஆண்டு கொரோனா தாக்கம் காரணமாக ஆழித்தேரோட்ட விழா ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டு கடந்த 2-ந் தேதி பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் சாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 
ஆழித்தேரோட்டம்
ஆழித்தேரோட்ட விழா கடந்த 30 ஆண்டுகளுக்கு பிறகு ஆகமவிதிப்படி ஆயில்ய நட்சத்திரத்தில் வருகிற 25-ந் தேதி(வியாழக்கிழமை) நடைபெறுகிறது. அன்று காலை 5 மணிக்கு விநாயகர், சுப்பிரமணியர் தேரோட்டமும், 7.30 மணிக்கு ஆழித்தேரும் வடம் பிடிக்கப்படுகிறது. அதனுடன் கமலாம்பாள், சண்டிகேஸ்வரர் தேரோட்டமும் நடக்கிறது.
இந்த நிலையில் ஆழித்தேர் அலங்கரிக்கும் பணி தொடங்கியது. இதற்காக சவுக்கு, பனை சாத்துக்கள் உதவியுடன் தேரின் மேல் பகுதியில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
தேர் சீலைகள் கட்டும் பணி
தற்போது தேர் சீலைகள் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.இதனை தொடர்ந்து 24-ந்தேதி (புதன்கிழமை) தியாகராஜர் அஜபா நடனத்துடன் ஆழித்தேரில் எழுந்தருளுகிறார். 
தேரோட்டத்திற்கு இன்னும் 3 நாட்களே உள்ளதால் தேர் அலங்கரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Next Story