ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்


ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்
x
தினத்தந்தி 21 March 2021 6:51 PM GMT (Updated: 21 March 2021 6:57 PM GMT)

ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்.

பென்னாகரம்,

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். தற்போது ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,000 கன அடியாக குறைந்துள்ளதாலும், கோடை காலம் தொடங்கி உள்ளதாலும் சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று வார விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் பாதுகாப்பு உடை அணிந்து கோத்திக்கல் பரிசல் துறையில் இருந்து மெயின் அருவி, மணல் திட்டு, ஐந்தருவி வரை காவிரி ஆற்றில் பாறைகளுக்கு இடையே பரிசலில் சென்று மகிழ்ந்தனர்.

விற்பனை படுஜோர்

கொளுத்தும் வெயிலிலும் சுற்றுலா பயணிகள் மீன் அருங்காட்சியகம், முதலைப்பண்ணை, சிறுவர் பூங்கா, தொங்குபாலம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்தனர். சுற்றுலா பயணிகள் அதிகரிப்பால் ஒகேனக்கல் பஸ் நிலையம், நடைபாதை, அஞ்செட்டி சாலை உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் அலைமோதியது. மேலும் கடைகள், ஓட்டல்களில் விற்பனை படுஜோராக நடைபெற்றது. 

கோடை வெயிலை சமாளிக்க சுற்றுலா பயணிகள் தர்பூசணி மற்றும் இளநீர், குளிர்பானம் ஆகியவற்றை வாங்கி பருகினர். அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க போலீசார், தீயணைப்பு படையினர் ஊட்டமலை, ஆலம்பாடி, மணல் திட்டு, பரிசல் துறை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்தனர்.

Next Story