மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சி


மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 21 March 2021 9:25 PM GMT (Updated: 21 March 2021 9:25 PM GMT)

மாற்றுத்திறனாளிகள் வாக்கு எந்திரங்களில் வாக்களிப்பது எப்படி என்பது பற்றிய பயிற்சியை கலெக்டர் கண்ணன் தொடங்கி வைத்தார்.

சிவகாசி, 
மாற்றுத்திறனாளிகள் வாக்கு எந்திரங்களில் வாக்களிப்பது எப்படி என்பது பற்றிய பயிற்சியை கலெக்டர் கண்ணன் தொடங்கி வைத்தார். 
விழிப்புணர்வு நிகழ்ச்சி 
சிவகாசி சாட்சியாபுரத்தில் உள்ள சி.எஸ்.ஐ. செவிதிறன் குறையுடையோர் உயர்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் செவித்திறன் குறையுடையோருக்கான சைகை மொழி தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கண்ணன் தொடங்கி வைத்தார். 
அப்போது வாக்காளர் விழிப்புணர்வு உறுதி மொழியினை மாவட்ட தேர்தல் அதிகாரி கண்ணன் வாசித்தார். இதை சி.எஸ்.ஐ. பள்ளி தலைமையாசிரியர் சைகை மொழியில் மொழிபெயத்தார். 
வாக்கு எந்திரம் 
இதைபுரிந்து கொண்ட மாற்றுத்திறனாளிகள் சைகை மொழியில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பின்னர் மின்னணு வாக்கு எந்திரத்தில் எவ்வாறு வாக்களிப்பது என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. 
தொடர்ந்து மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஆர்வமுடன் மின்னணு வாக்கு எந்திரத்தில் வாக்களிப்பது என்பதை செயல்படுத்தி காட்டினர். பின்னர் தங்களுக்கு ஏற்பட்ட சந்தேகத்தை சைகை மூலம் கேட்டு தெரிந்து கொண்டனர். 
100 சதவீதம் வாக்கு 
இந்தநிகழ்ச்சியில் 145 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அவர்கள் தங்களது தலைமையாசிரியர் உதவியுடன் வருகிற சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்போம் என்று சைகை முறையில் தெரிவித்தனர். 
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராமசுப்பிரமணியன், திட்ட இயக்குனர் ஜெயக் குமார், சிவகாசி சப்-கலெக்டர் தினேஷ்குமார், மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் சந்திரசேகர், சிவகாசி தாசில்தார் ராமசுப்பிரமணியன், சி.எஸ்.ஐ. பள்ளியின் தலைமையாசிரியர் பால்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story