சென்னையில் துணிகரம்; கப்பல் நிறுவன ஊழியர் வீட்டில் 150 பவுன் நகை கொள்ளை; மேலும் 2 வீடுகளிலும் கைவரிசை
கப்பல் நிறுவன ஊழியர் வீட்டில் 150 பவுன் நகையை கொள்ளையடித்த மர்மநபர்கள், மேலும் 2 வீடுகளின் பூட்டை உடைத்து கைவரிசையை காட்டிய சம்பவம் சென்னை ஆதம்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கப்பல் நிறுவன ஊழியர்
சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் ஜீவன் நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் கணேஷ் (வயது 59). இவர், பெருங்குடியில் உள்ள தனியார் கப்பல் போக்குவரத்து நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 17-ந் தேதி இவர், வீட்டின் பூட்டிவிட்டு, குடும்பத்துடன் தனது சொந்த ஊரான திருச்செந்தூருக்கு சென்றுவிட்டார். நேற்று இவரது வீட்டின் கதவில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக அக்கம் பக்கத்தினர் கணேசுக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தனர்.இதையடுத்து அவர், ‘ஆன்-லைன்’ மூலம் கொடுத்த புகாரின்படி, ஆதம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
150 பவுன் நகை கொள்ளை
அப்போது வீடு முழுவதும் துணிகள் கலைந்து கிடந்தன. படுக்கை அறையில் இருந்த 2 பீரோ லாக்கர்கள் உடைக்கப்பட்டு இருந்தது. சம்பவ இடத்துக்கு. தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன.இதற்கிடையில் திருச்செந்தூரில் இருந்து சென்னை திரும்பிய கணேஷ், போலீசாரிடம் தனது வீட்டில் இருந்த 150 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள், ரூ.40 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்மநபர்கள், கொள்ளையடித்து சென்றுவிட்டதாகவும், கொள்ளை போன பொருட்களின் முழு விவரம் ஊரில் உள்ள தனது மனைவிக்குத்தான் தெரியும் எனவும் தெரிவித்தார்.
மேலும் 2 வீடுகளில்....
அதேபோல் கொள்ளையர்கள் ஆதம்பாக்கம் ஜீவன்நகர் முதல் தெருவை சேர்ந்த வினோத் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 3 பவுன் நகைகள், வெள்ளிப்பொருட்களையும் அள்ளிச்சென்றுவிட்டனர்.மேலும் அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள், அங்கு ஒன்றும் கிடைக்காததால் துணி மணிகளை களைத்துபோட்டுவிட்டு, பாத்திரங்களையும் உருட்டிவிட்டு ஏமாற்றத்துடன் சென்றுவிட்டனர்.ஒரே நாளில் அடுத்தடுத்து 3 வீடுகளில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் குறித்து ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story