திருப்பத்தூர் மாவட்டத்தில் 1,808 பேர் தபால் வாக்களிக்க விண்ணப்பம்


திருப்பத்தூர் மாவட்டத்தில் 1,808 பேர் தபால் வாக்களிக்க விண்ணப்பம்
x
தினத்தந்தி 23 March 2021 11:52 PM IST (Updated: 23 March 2021 11:52 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் மாவட்டத்தில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 1808 பேர் தபால் வாக்களிக்க விருப்பம் ெதரிவித்து விண்ணப்பங்கள் வழங்கி உள்ளனர்.

திருப்பத்தூர்

4 தொகுதிகள்

இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய நடைமுறை படி வருகிற சட்டமன்ற பொதுத் தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அவர்கள் இருப்பிடத்தில் இருந்தபடியே தபால் வாக்குகளை பதிவு செய்து அனுப்பி விடலாம் என்ற வசதியை நடைமுறைப்படுத்தி உள்ளது.

அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் விருப்பமுள்ள மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து தபால் வாக்களிக்க மனுக்கள் வழங்கப்பட்டதன் அடிப்படையில் கீழ்கண்ட எண்ணிக்கையில் தபால் வாக்களிக்க விருப்ப விண்ணப்பங்கள் வரப்பட்டுள்ளன.

தபால் வாக்களிக்க விருப்பம்

வாணியம்பாடி தொகுதியில் 410 மூத்த குடிமக்கள், 140 மாற்றுத்திறனாளிகள் என 550 வாக்குகளும், ஆம்பூர் தொகுதியில் மூத்த குடிமக்கள் 301, மாற்றுத்திறனாளிகள் 116 என மொத்தம் 417 தபால் வாக்குகள், ஜோலார்பேட்டை தொகுதியில் 298 மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் 100 என மொத்தம் 398 தபால் வாக்குகள்.

திருப்பத்தூர் தொகுதியில் 339 மூத்த குடிமக்கள், 104 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 443 தபால் வாக்குகள், திருப்பத்தூர் மாவட்டத்தில் 1,348 மூத்த குடிமக்களும், 460 மாற்றுத்திறனாளிகள் என ஆக மொத்தம் 1,808 பேர் தபால் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அலுவலர்களுக்கு அறிவுரை

மேற்கண்ட நபர்கள் சம்பந்தப்பட்ட இருப்பிடங்களிலேயே தங்களுடைய வாக்கை பதிவு செய்திட மண்டல அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தபால் வாக்குகளை கொண்டு சென்று சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், கிராம ஊராட்சி செயலாளர் மற்றும் அப்பகுதியில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்காளர் தபால் வாக்கு படிவத்தில் தன்னுடைய வாக்கைப்பதிவு செய்து தேர்தல் பணி அலுவலரிடம் கொண்டு செல்லும் பெட்டியில் அளித்துவிடலாம்.

இதற்கான பிரத்யேக வாகன வசதி, வாகனம் ஒவ்வொரு இடங்களுக்கும் செல்ல சாலை வழித்தடம் தயாரிப்பு, காவல் பாதுகாப்பு மற்றும் அலுவலர்கள் நியமனங்கள் அந்தந்தத் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மேற்கொள்ள இருக்கிறார்கள். வாக்குப்பதிவு நாள் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும். அதற்கு முன்னதாக அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ள அனைத்துத் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 
மேற்கண்ட தகவலை கலெக்டர் சிவன் அருள் தெரிவித்துள்ளார்.

Next Story