பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கு புதிய திட்டங்களை கொண்டுவர என்னை வெற்றி பெற செய்யுங்கள் அ.தி.மு.க. வேட்பாளர் பவுன்ராஜ் வேண்டுகோள்
பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கு புதிய திட்டங்களை கொண்டுவர என்னை வெற்றி பெற செய்யுங்கள் என்று அ.தி.மு.க. வேட்பாளர் பவுன்ராஜ் வாக்காளர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
பொறையாறு,
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளரும், மயிலாடுதுறை மாவட்ட செயலாளருமான எஸ்.பவுன்ராஜ் எம்.எல்.ஏ. செம்பனார்கோவில் ஒன்றிய பகுதியில் அனல்பறக்கும் வெயிலில் வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் செம்பனார்கோவில் ஒன்றியம் ஆறுபாதி, இளையார், பரசலூர், மேமாத்தூர் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சி பகுதிகளுக்கு திறந்த ஜீப்பில் சென்று பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர், இளையார் பகுதியில் முஸ்லிம் ஜமாத் மற்றும் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அவருக்கு வடகரை தொழில் அதிபர் பாம்ஸ்சுல்தான், ஜமாத் துணைத் தலைவர் அலிஜின்னா, ஊராட்சி மன்ற தலைவர் சுக்கரியாபர்வின் தமிமுன் அன்சாரி மற்றும் பொதுமக்கள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.
அப்போது வேட்பாளர் பவுன்ராஜ் கூறுகையில், அ.தி.மு.க அரசு என்றைக்கும் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும். தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியது போல் விரைவில் சென்னையில் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் பெயரில் பல்கலைக்கழகம் தொடங்கப்படும். தேர்தல் வாக்குறுதிகளை அ.தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றி தரும்.
பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் 10 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றியுள்ளேன். பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கு புதிய திட்டங்களை கொண்டுவரவும், விட்ட பணிகள் தொடரவும் எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் என்றார்.
முன்னதாக அவர் வடகரை கடைத்தெருவில் தேர்தல் பணிமனையை திறந்து வைத்தார். அப்போது அவருடன் செம்பனார்கோவில் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சுந்தரராஜன், த.மா.கா. இளைஞர் அணி நிர்வாகி கார்த்திக் மற்றும் பா.ம.க. உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story