ஊட்டி நகராட்சி மார்க்கெட் வியாபாரிகள் 116 பேருக்கு கொரோனா தடுப்பூசி


ஊட்டி நகராட்சி மார்க்கெட் வியாபாரிகள் 116 பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 25 March 2021 9:12 PM IST (Updated: 25 March 2021 9:14 PM IST)
t-max-icont-min-icon

தொற்று பரவலை தடுக்க ஊட்டி நகராட்சி மார்க்கெட் வியாபாரிகள் 116 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அதிக நபர்கள் பாதிக்கப்பட்ட இடங்களை கண்டறிந்து, அங்கு வசிப்பவர்களுக்கு தொற்று பரவுவதை தடுக்க கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.  இதற்காக 108 ஆம்புலன்சில் சுகாதார நடமாடும் மருத்துவ குழு சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது.

மேலும் பொதுமக்கள் அதிகம் பேருடன் தொடர்பில் இருக்கும் அரசு பஸ், ஆட்டோ டிரைவர்கள், கடைக்காரர்கள், காய்கறிகளை வெளியிடங்களுக்கு எடுத்து சென்று விற்பனை செய்பவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கடைகளுக்கு வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

மேலும் காய்கறி மண்டிகளுக்கு கிராமப்புறங்களில் இருந்து அறுவடை செய்த காய்கறிகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வருகிறார்கள். வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து காய்கறிகளை மொத்தமாக வாங்கி செல்லும் வியாபாரிகள் வந்து செல்கின்றனர். 

இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதை கருத்தில் கொண்டு சுகாதாரத்துறை மூலம் ஊட்டி நகராட்சி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினருடன் கலந்தாலோசித்து தடுப்பூசி போட அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முதல் மார்க்கெட் கடை வியாபாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. இதனை ஊட்டி நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி, சுகாதார அதிகாரி டாக்டர் விஜய் சந்திரன் ஆகியோர் பார்வையிட்டனர்.

சுகாதார குழுவினர் மார்க்கெட்டில் முகாமிட்டு தடுப்பூசி செலுத்தினர். வியாபாரிகள் தங்களது ஆதார் அட்டை அல்லது ஏதேனும் ஆவணம் ஒன்றை காண்பித்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.  45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தவறாமல் தடுப்பூசி செலுத்த முன் வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. நேற்று மார்க்கெட் வியாபாரிகள் 116 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Next Story