ஊட்டி காந்தல் பகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற வேலூர் இப்ராஹிம் தடுத்து நிறுத்தம்
ஊட்டி காந்தல் பகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற வேலூர் இப்ராஹிமை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் பா.ஜ.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஊட்டி,
தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் தலைவர் வேலூர் இப்ராஹிம் ஊட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் எம்.போஜராஜனை ஆதரித்து நேற்று ஊட்டி ஏ.டி.சி., மத்திய பஸ் நிலையத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார்.
பின்னர் அவர் ஊட்டி லோயர் பஜார், மெயின் பஜாரில் உள்ள கடைகளுக்கு சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார். தொடர்ந்து மாலையில் வேலூர் இப்ராஹிம் முஸ்லிம் மக்கள் அதிகமாக வசிக்கும் காந்தல் பகுதியில் வாக்கு சேகரிப்பதற்காக சென்றார். அந்த பகுதிக்குள் அவர் வாக்கு சேகரிக்க தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் ரோகிணி சந்திப்பு பகுதிக்கு காரில் வந்த வேலூர் இப்ராஹிமை நக்சல் தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மோகன் நிவாஸ், ஊட்டி நகர போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஸ்வரன் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அப்போது அவர் தான் நட்சத்திர பேச்சாளர் என்பதால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் அனுமதித்து உள்ளது. வாக்கு கேட்பது ஜனநாயக கடமை. எங்களை தடுக்கக்கூடாது. நாங்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிப்போம் என்றார். அதற்கு போலீசார் உங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை என்றனர்.
இதனால் பா.ஜ.க.வினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் காந்தல் பகுதியில் வாக்கு சேகரிக்க அனுமதிக்கும்படி ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலை ரோகிணி சந்திப்பில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் அரை மணி நேரத்துக்கு மேல் போராட்டம் நீடித்தது. பாரதீய ஜனதா கட்சியினர் கோஷங்கள் எழுப்பியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் ரோகிணி சந்திப்பு பகுதியில் வாக்கு சேகரிக்க அனுமதித்தனர். அதனை தொடர்ந்து வேலூர் இப்ராஹிம் பிங்கர்போஸ்ட், தலைகுந்தா பகுதியில் வாக்கு சேகரித்து விட்டு சென்றார்.
முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறும்போது, தமிழகத்தில் பழனி, அரவக்குறிச்சியில் வாக்கு சேகரிக்க சென்ற போது தடுத்து நிறுத்தினார்கள்.
ஊட்டி காந்தல் பகுதியில் வசிக்கும் இஸ்லாமிய மக்களிடத்தில் குடியுரிமை திருத்தச்சட்டம் குறித்து எடுத்துக் கூறி வாக்கு சேகரிக்க சென்ற போது தடுத்தனர். இது ஜனநாயகத்துக்கு விரோதமானது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story