சென்னை வியாசர்பாடியில் பிரசாரத்தின்போது வேட்பாளர் என்.ஆர்.தனபாலனை அரிவாளால் வெட்ட பாய்ந்த வாலிபரால் பரபரப்பு; தடுக்க முயன்ற அ.தி.மு.க. பிரமுகர் படுகாயம்


சென்னை வியாசர்பாடியில் பிரசாரத்தின்போது வேட்பாளர் என்.ஆர்.தனபாலனை அரிவாளால் வெட்ட பாய்ந்த வாலிபரால் பரபரப்பு; தடுக்க முயன்ற அ.தி.மு.க. பிரமுகர் படுகாயம்
x
தினத்தந்தி 26 March 2021 5:57 AM IST (Updated: 26 March 2021 5:57 AM IST)
t-max-icont-min-icon

சென்னை வியாசர்பாடியில் தேர்தல் பிரசாரத்தின்போது வேட்பாளர் என்.ஆர்.தனபாலனை அரிவாளால் வெட்ட பாய்ந்த வாலிபரை தடுக்க முயன்ற அ.தி.மு.க. பிரமுகருக்கு வெட்டு விழுந்தது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

என்.ஆர்.தனபாலன் போட்டி

சென்னை பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் போட்டியிடுகிறார். அவர் கடந்த சில நாட்களாக பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி கட்சி பிரமுகர்களுடன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

வழக்கம்போல் நேற்றும் அவர் அ.தி.மு.க. கூட்டணி கட்சி பிரமுர்கள், தொண்டர்களுடன் வியாசர்பாடி உதயசூரியன் நகர் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார்.

அரிவாளுடன் பாய்ந்த வாலிபர்

அப்போது திடீரென பிரசார கூட்டத்தின் நடுவே கையில் அரிவாளுடன் வாலிபர் ஒருவர், வேட்பாளர் என்.ஆர்.தனபாலனை வெட்டுவதற்காக அவரை நோக்கி பாய்ந்து வந்தார். இதைகண்ட பெரம்பூர் தொகுதி 37-வது. வட்ட அ.தி.மு.க. மேலவை பிரதிநிதி சிவக்குமார், அரிவாளுடன் பாய்ந்து வந்த வாலிபரை தடுக்க முயன்றார். இதில் சிவக்குமாரின் வலது கை தோள்பட்டையில் வெட்டு விழுந்தது. இதனால் என்.ஆர்.தனபாலன் மயிரிழையில் உயிர் தப்பினார். இதை கண்டு உடன் இருந்த கூட்டணி கட்சியினர் அலறி அடித்து ஓடினர். அதை பயன்படுத்தி அரிவாளால் வெட்டிய வாலிபரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

அ.தி.மு.க. பிரமுகர் படுகாயம்

அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த அ.தி.மு.க. பிரமுகர் சிவக்குமாரை மீட்டு கொடுங்கையூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியல் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி தகவல் அறிந்துவந்த எம்.கே.பி. நகர் போலீசார் பிரசார கூட்டத்தினரை சமாதானம் செய்தனர்.

அதைதொடர்ந்து வேட்பாளர் என்.ஆர்.தனபாலன், பகுதி செயலாளர்கள் என்.எம்.பாஸ்கர், இளங்கோவன் மற்றும் கூட்டணி கட்சியினர் 100-க்கும் மேற்பட்டோர் எம்.கே.பி. நகர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு அ.தி.மு.க. பிரமுகரை அரிவாளால் வெட்டிய வாலிபரை உடனே கைது செய்ய வேண்டும். இதற்கு தூண்டுதலாக இருந்தவர்களையும் கைது செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் இது தொடர்பாக வேட்பாளர் என்.ஆர்.தனபாலன், நிருபர்களிடம் கூறியதாவது:-

தோல்வி பயத்தில் சதிவேலை

தி.மு.க.வினர் தோல்வி பயத்திலேயே இதுபோன்ற சதி வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அப்படி இருந்தும் நாங்கள் யாருக்கும் தொல்லை கொடுக்காமல் பிரசாரம் செய்து வருகிறோம்.

இன்று(அதாவது நேற்று) தி.மு.க.வினர் தூண்டுதலின் பேரிலேயே அந்த மர்மநபர் அரிவாளால் வெட்டுவதற்காக என்னை நோக்கி ஓடிவந்தார். இதை பார்த்த அ.தி.மு.க. பிரமுகர் சிவக்குமார், தனது தோளில் அந்த வெட்டை வாங்கிக்கொண்டார். இல்லையென்றால் எனக்கு அரிவாள் வெட்டு விழுந்திருக்கும். எனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். இது தொடர்பாக பெரம்பூர் தொகுதி தேர்தல் அலுவலரிடமும் புகார் மனு கொடுத்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story