15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மலம்பட்டி, மதியநல்லூரில் 100 ஏக்கரில் சிப்காட் தொழிற்சாலை; தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
விராலிமலை சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
அவருக்கு பெண்கள், ஆண்கள், பெரியோர் உள்பட அனைவரும் கும்மியாட்டம், கோலாட்டம், தப்பாட்டத்துடன் இரட்டை இலை சின்னத்துடன் கோலம் வரைந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிலையில் நேற்று விராலிமலை கிழக்கு ஒன்றியம், பேராம்பூர், சூரியூர், ஆவூர், குமாரமங்கலம், மாத்தூர், மண்டையூர் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த 45 கிராமங்களில் அமைச்சர் விஜயபாஸ்கர் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசுகையில், விராலிமலை தொகுதி மக்களாகிய உங்களுக்கு மழை, புயல், வெயில் காலங்களிலும், கொரோனா காலத்திலும் ஓடோடி வந்து உதவி செய்துள்ளேன். தொடர்ந்து உதவி செய்வேன். பெண்களின் கஷ்டங்களை அறிந்து அனைத்து குடும்பத்திற்கும் அ.தி.மு.க. அரசு பல்வேறு உதவிகளை செய்து உள்ளது. தற்போது வாஷிங் மெஷின், வருடத்திற்கு 6 சிலிண்டர், குடும்ப அட்டைக்கு ரூ.1,500 உதவித்தொகை இலவசமாக வழங்கப்பட உள்ளது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக உங்களுடைய 100 ஆண்டுகால கனவு திட்டமான காவிரி ஆற்றை இந்த பகுதிக்கு திருப்பி விடப்பட உள்ளது. அதனால், இந்த பகுதி பசுமை பூமியாக மாற உள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்த இந்த திட்டத்தின் மூலம் காமராஜர் கண்ட கனவு நிறைவேற உள்ளது.
அதேபோல ஆவூர் அருகே உள்ள மலம்பட்டியில் 130 ஏக்கரிலும், அன்னவாசல் ஒன்றியம் மதியநல்லூரில் 100 ஏக்கரிலும் சிப்காட் தொழிற்பேட்டை அமைய உள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்துள்ளார். இதன்மூலம் இந்த பகுதிகளை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என சுமார் 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.
ஆகவே, எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து மீண்டும் வெற்றிபெற வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
பிரசாரத்தின் போது விராலிமலை அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் திருமூர்த்தி (கிழக்கு), ஏவி.ராஜேந்திரன் (வடக்கு) மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.
Related Tags :
Next Story