காதர்வேடு கிராமத்தில் சுடுகாடு ஆக்கிரமிப்பை கண்டித்து கிராம மக்கள் பிணத்துடன் போராட்டம்


காதர்வேடு கிராமத்தில் சுடுகாடு ஆக்கிரமிப்பை கண்டித்து கிராம மக்கள் பிணத்துடன் போராட்டம்
x
தினத்தந்தி 26 March 2021 7:20 PM IST (Updated: 26 March 2021 7:20 PM IST)
t-max-icont-min-icon

காதர்வேடு கிராமத்தில் சுடுகாடு ஆக்கிரமிப்பை கண்டித்து கிராம மக்கள் பிணத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் மாம்பளம் ஊராட்சியில் உள்ளது காதர்வேடு கிராமம். இங்கு உள்ள கொசஸ்தலை ஆற்றின் ஓரம் 2½ ஏக்கர் பரப்பளவில் பொது சுடுகாடு உள்ளது. இதே கிராமத்தை சேர்ந்த விவசாயி குப்புசாமி (வயது 65) நேற்று முன்தினம் மரணம் அடைந்தார்.

கிராம மக்கள் மற்றும் அவரது உறவினர்கள் குப்புசாமியின் உடலை அடக்கம் செய்ய சுடுகாட்டுக்கு கொண்டு சென்றனர். சுடுகாட்டின் தெற்கு திசையில் 20 சென்ட் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து இதே கிராமத்தை சேர்ந்த தனிநபர் ஒருவர் கட்டுமான பணியை மேற்கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து குப்புசாமியின் உடலை சுடுகாட்டின் அருகே வைத்து கொண்டு ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் சம்பத் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார்.

வருவாய்த்துறை அதிகாரிகளின் மூலம் ஒரு வார காலத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உறுதி கூறினார். அதன் பின்னர், குப்புசாமியின் உடலை அடக்கம் செய்து விட்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story