அ.தி.மு.க. அரசு மீண்டும் அமைய இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் தளவாய்சுந்தரம் பிரசாரம்
பெண்களின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட அ.தி.மு.க. அரசு மீண்டும் அமைய இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்று தளவாய்சுந்தரம் கூறினார்.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் தளவாய் சுந்தரம் போட்டியிடுகிறார். அவர் கிராமம்-கிராமமாக சென்று வாக்காளர்களை நேரில் சந்தித்து, அவர்களுடன் சரிசமமாக தரையில் அமர்ந்து கலந்துரையாடி நூதனமான முறையில் ஆதரவு திரட்டி வருகிறார்.
இந்த நிலையில் அவர் நேற்று காலை தோவாளையை அடுத்த வெள்ளமடம் சந்திப்பில் இருந்து தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். சகாயநகர், பீமநகரி, திருப்பதிசாரம், செண்பகராமன்புதூர், சோழபுரம், மாதவலாயம், மயிலாடி உள்பட ஏராளமான கிராமங்களில் வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது தளவாய்சுந்தரம் பேசும் போது கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 27-ந் தேதி (நாளை) உங்களையெல்லாம் சந்தித்து வாக்கு சேகரிக்க வருகிறார். மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தந்த அரசு அ.தி.மு.க. அரசு. ஏழை-எளிய மக்களின் நலன் கருதி கிராமம் தோறும் அம்மா கிளினிக்குகள் கொண்டு வரப்பட்டது.
அ.தி.மு.க. அரசு கன்னியாகுமரி தொகுதியில் கொண்டு வந்துள்ள தென்னை பொருட்களுக்கான மதிப்புக்கூட்டு மையம் அமைக்கும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. இதன் மூலம் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தொழில் வாழ்வாதாரம் பெற்று பயனடைவார்கள்.
மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2 முக்கியஅறிவிப்புகளைவெளியிட்டு உள்ளார். அதன்படி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் 1500 ரூபாய் வழங்கப்படும். அதேபோல் ஆண்டுக்கு 6 கியாஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.
ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் இலவசமாக வாஷிங்மெஷின் வழங்கப்படும். அ.தி.மு.க. உங்களுடைய ஆதரவினால் வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும் முதல் பணியாக எனது தொகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் இந்த திட்டங்களை கொண்டு சேர்ப்பேன். மாணவர்களுக்கு இலவச லேப்டாப், சைக்கிள் போன்றவற்றை இந்த அரசு வழங்குகிறது. விவசாய கடன்களை முதல்-அமைச்சர் தள்ளுபடி செய்துள்ளார். கோவளத்தில் சரக்கு பெட்டக துறைமுகம் வராது என உறுதி அளிக்கிறேன்.
பெண்களின் முன்னேற்றத்தை பற்றி எப்போதுமே சிந்திக்கிற அரசு. எனவே அ.தி.மு.க. அரசு மீண்டும் அமைய இரட்டை இலை சின்னத்தையும், நாடாளுமன்ற இடைத்தேர்தலில் தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
அவருடன் பீமநகரி பஞ்சாயத்து தலைவி சஜிதா, தோவாளை யூனியன் தலைவர் சாந்தினி பகவதியப்பன், யூனியன் உறுப்பினர் பரமசிவன், மாதவலாயம் ஷேக் உள்பட பலர் சென்று வாக்கு சேகரித்தனர்.
Related Tags :
Next Story