திருச்சி மாவட்டம் துறையூரில் தி.மு.க. வேட்பாளர் ஸ்டாலின் குமார் தீவிர பிரசாரம்
துறையூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஸ்டாலின் குமார் துறையூரை சுற்றியுள்ள கிராமங்களில் முதல் கட்டமாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தற்போது அவர், துறையூர் நகர் பகுதியில் நேற்று மேட்டுத்தெரு, பாரதி அரங்கம், ஆத்தூர் ரோடு, தெப்பக்குளம், வடக்குத்தெரு, கீழ கடைவீதி, கட்டபொம்மன் தெரு மற்றும் ஒன்பதுக்கும் மேற்பட்ட வார்டுகளில் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் செல்லும் இடங்களில் எல்லாம் அவருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கி ஆரத்தி எடுத்து பரிவட்டம் கட்டி பெண்கள் வரவேற்றார்கள்.
அப்போது தி.மு.க. வேட்பாளர் ஸ்டாலின்குமார் பேசியதாவது, 2016-ம் ஆண்டு எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து உங்களுக்காக உங்களில் ஒருவனாக பணியாற்ற வாய்ப்பு அளித்தீர்கள். அதனை பயன்படுத்தி கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளேன். பல ஆண்டுகளாக துறையூர் திருச்சி சாலை இருளில் மூழ்கியிருந்தது. நான் நடவடிக்கை எடுத்து தற்போது இரவிலும், பகல் போன்று காட்சியளிக்கிறது. அதுமட்டுமின்றி பல ஆண்டுகளாக ஆதிதிராவிடர் உண்டு உறைவிட மாணவியர் விடுதி துறையூரில் பழைய ஓட்டு கட்டிடத்தில் இயங்கி வந்தது. தற்போது அதை அடுக்குமாடி குடியிருப்பு போல் எனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டிக் கொடுத்துள்ளேன். இதேபோல் துறையூரில் இருந்து டயாலிஸிஸ் சிகிச்சை செய்வதற்கு திருச்சி தான் செல்ல வேண்டும். ஆனால் நமது ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையிலும் அரிதாக இருந்த டயாலிசிஸ் சிகிச்சை தற்போது துறையூரில் உள்ள அரசு மருத்துவ மனையில் நடைமுறையில் உள்ளது. இதனை எனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து செய்து கொடுத்துள்ளேன். உங்களில் ஒருவனாய் மேலும் பல நல்ல திட்டங்களை
செயல்படுத்திட எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி அடைய செய்யுங்கள் என்று பேசினார்.
அப்போது மாவட்ட ஊராட்சி தலைவர் தர்மன் ராஜேந்திரன், நகர செயலாளர் மெடிக்கல் முரளி, ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, மாவட்ட பிரதிநிதி மதியழகன், கார்த்திகேயன், நகர துணை செயலாளர் ராஜேஸ்வரி சேகர்உள்பட தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.
Related Tags :
Next Story