பெரியகுளம் தென்கரையில் பங்குனி உத்திர திருவிழா தேரோட்டம்
பெரியகுளம் தென்கரையில் உள்ள பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.
பெரியகுளம்:
பெரியகுளம் தென்கரையில் பிரசித்திபெற்ற பாலசுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர தேர்த்திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து திருவிழாவின் ஒவ்வொரு நாளும் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளியும், வீதிஉலா வந்தும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்தநிலையில் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி தென்கரை கச்சேரி ரோட்டில் நிலை நிறுத்தப்பட்டிருந்த தேர் பூக்களால் அலங்கரிக்கப்பட்டது. பின்னர் பாலசுப்பிரமணியசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். அதன்பிறகு தேர் அங்கிருந்து புறப்பட்டது. முன்னதாக திருவிழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து கோவிலை சுற்றியுள்ள வீதிகளில் தேர் வலம் வந்தது. இந்த நிகழ்ச்சியில் கைலாசநாதர் கோவில் அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு தலைவர் ஜெயபிரதீப், நகரின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அண்ணாத்துரை மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story