அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால்தான் தஞ்சை மேலும் வளர்ச்சி அடையும் தஞ்சை தொகுதி வேட்பாளர் அறிவுடைநம்பி பேட்டி


அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால்தான் தஞ்சை மேலும் வளர்ச்சி அடையும் தஞ்சை தொகுதி வேட்பாளர் அறிவுடைநம்பி பேட்டி
x
தினத்தந்தி 28 March 2021 8:54 PM IST (Updated: 28 March 2021 8:54 PM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. ஆட்சியில் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தான் தஞ்சை மேலும் வளர்ச்சி அடையும் என்று தஞ்சை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அறிவுடைநம்பி கூறினார்.

தஞ்சாவூர், 

தஞ்சை சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக அறிவுடைநம்பி போட்டியிடுகிறார். அவர் தஞ்சை தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 
பிரசாரத்திற்கு இடையே அவர் ‘தினத்தந்தி’ க்கு அளித்த பேட்டி வருமாறு:-

தஞ்சை தொகுதியில் நான் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறேன். செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் எனக்கு அமோக ஆதரவை அளித்து வருகிறார்கள். தஞ்சை நகரம் வளர்ச்சி அடைந்தது என்றால் அது அ.தி.மு.க. ஆட்சியில் தான். 2001 முதல் அ.தி.மு.க. தொடர்ந்து 10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்து வருகிறது. அ.தி.மு.க. ஆட்சியில்தான் கடந்த 1995-ம் ஆண்டு தஞ்சையில் 8-வது உலகத்தமிழ் மாநாடு நடத்தப்பட்டது. அப்போது தஞ்சை புதிய பஸ் நிலையம், ராஜராஜ சோழன் மணிமண்டபம், தொல்காப்பியர் சதுக்கம், பெரியகோவில் அருகே மேம்பாலம் ஆகியவை கட்டப்பட்டது. சாலைகள் மேம்படுத்தப்பட்டன. தஞ்சை சுற்றுவட்ட சாலை அமைக்கப்பட்டது. 

தஞ்சை கலெக்டர் அலுவலகம், புதிய போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், மேம்பாலங்கள் கட்டப்பட்டது அ.தி.மு.க. ஆட்சியில் தான்.

100 ஆண்டுகளாக ஓடாமல் இருந்த தஞ்சை பெரியகோவிலுக்கு புதிய தேர்வு செய்ய நிதி ஒதுக்கீடு செய்து தேரோட்டத்தை நடத்தியவர் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா. தஞ்சை பெரிய கோவிலில் 23 ஆண்டுகளுக்குப்பிறகு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பெரியகோவில் குடமுழுக்கை உலகமே வியக்கும் வகையில் நடத்தியது அ.தி.மு.க. அரசு.
நகராட்சியாக இருந்த தஞ்சை, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் தஞ்சை மாநகராட்சியை ஸ்மார்ட் சிட்டியாக அறிவித்து ரூ.1000 கோடிக்கு மேல் பணிகள் நடந்து வருகிறது. அய்யன் குளம், சாமந்தான் குளம் சீரமைப்பு, பழைய பஸ் நிலையம் ரூ.40 கோடியில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் திருவையாறு பஸ் நிலையம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. திருவள்ளுவர் திரையரங்கம் இருந்த பகுதியில் நவீன வணிக வளாகம் ரூ.56 கோடியில் கட்டப்பட்டு வருகிறது.

தி.மு.க. ஆட்சியில் எந்த திட்டமும் சொல்லிக்கொள்ளும்படி தஞ்சையில் நிறைவேற்றப்படவில்லை. தஞ்சை மாநகராட்சியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் இருந்து ரூ.250 கோடி செலவில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து, குழாய்கள் பதித்து நீரேற்று நிலையம் அமைத்து வழங்குவதற்கு பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. நெடுஞ்சாலைத்துறை சார்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தஞ்சை-விக்கிரவாண்டி 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

மன்னர்கள் காலத்தில் வெட்டப்பட்ட தஞ்சை சமுத்திரம் ஏரி தற்போது தான் தூர்வாரப்பட்டுள்ளது. அதில் சுற்றுலாத்துறை சார்பில் படகு விட நடவடிக்கை எடுப்பதாக முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். தஞ்சை மருத்துவக்கல்லூரியில் ரூ.150 கோடியில் பல்நோக்கு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. ரூ.100 கோடியில் புற்று நோய் மையம், நவீன மருத்துவ உபரணங்கள் வழங்கப்பட்டு சிறந்த மருத்துவ சேவை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த கால தி.மு.க. ஆட்சியில் சொல்லிக்கொள்ளும்படி எந்த பணிகளும் தஞ்சை தொகுதியில் நடைபெறவில்லை. எனவே தஞ்சை தொகுதி மீண்டும் வளர்ச்சி அடைய அ.தி.மு.க. ஆட்சிக்கு வரவேண்டும். அதற்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

பொதுமக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவேன் மேலும் அவர் கூறுகையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்  கீழ் காமராஜர் மார்க்கெட்டில் புதிதாக கடைகள் கட்டப்பட்டு  வருகின்றன. இதேபோல் கீழவாசல் சரபோஜி மார்க்கெட் பகுதியிலும் கடைகள் கட்டப்பட்டு வருகின்றன.. 
வியாபாரிகளின் வேண்டுகோளை ஏற்று அங்கு ஏற்கனவே கடை வைத்திருந்த வியாபாரிகளுக்கு மீண்டும் கடைகள் ஒதுக்கீடு செய்ய உரிய நடவடிக்கை எடுப்பேன். இதேபோல் தரைக்கடை வியாபாரிகள் தஞ்சை மாநகரில் கடும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் நிரந்தரமாக ஒரே இடத்தில் தரைக்கடை வியாபாரிகளுக்கு தனியாக கடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தஞ்சை 13-வது வார்டில் உள்ள சருக்கை பகுதியில் பாலம் கட்ட நடவடிக்கை எடுப்பேன். தஞ்சை நாஞ்சிக்கோட்டை பகுதியில் போலீஸ் நிலையம் அமைக்கவும், ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கவும்  நடவடிக்கை மேற்கொள்வேன். அதேபோல அங்கு பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்தவும், தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் இருந்து நாஞ்சிக்கோட்டைக்கு பஸ் இயக்கவும் நடவடிககை மேற்கொள்வேன்.. தஞ்சை மேலவீதி, வடக்கு அலங்கம் பகுதியில் கோட்டை சுவர் பகுதிகளில் குடியிருப்பவர்களின் வீடுகள் அகற்றப்படும் என்று தி.மு.க.வினர் பொய் பிரசாரம் செய்து வருகிறார்கள். அவர்களின் வீடுகள் இடிக்கப்பட மாட்டாது என உறுதி அளிக்கிறேன்.

குடிசை மாற்று வாரியம் சார்பில் 600 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. வீடுக்ள இல்லாத ஏழை மக்களுக்கு குடிசை மாற்று வாரியத்தில் கட்டப்பட்ட வீடுகள் வழங்கப்படும். அதேபோல தஞ்சை மாநகரில் குப்கைளை தரம் பிரிக்கும மையம் அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதற்காக மாநகராட்சிக்கு வெளியே ஒரு இடத்தில் பொதுவாக குப்பைகள் கொட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆட்சியில் தஞ்சை மாநகரில் 70 சதவீத பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகளை அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நான் நிறைவேற்றுவேன என்றார்.

Next Story