நத்தம் தொகுதியில் ”மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற மீண்டும் ஒரு வாய்ப்பு தாருங்கள்” தி.மு.க. வேட்பாளர் ஆண்டிஅம்பலம் பிரசாரம்
சிறுகுடி, கோட்டையூர் உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது வீடு, வீடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
நத்தம்,
நத்தம் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் எம்.ஏ.ஆண்டிஅம்பலம் எம்.எல்.ஏ. வேட்பாளராக மீண்டும் போட்டியிடுகிறார். இதையொட்டி அவர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று அவர் நத்தம் அருகே உள்ள இடையபட்டி, செல்லப்பநாயக்கன்பட்டி, ஊராளிபட்டி, ஏரக்காபட்டி, சமுத்திராபட்டி, சம்பைபட்டி, பூதகுடி, சிறுகுடி, கோட்டையூர் உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது வீடு, வீடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
பிரசாரத்தின்போது எம்.ஏ.ஆண்டிஅம்பலம் பேசியதாவது:
தி.மு.க. தேர்தல் அறிக்கையின்படி, மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றதும் கொரோனா நிவாரண நிதியாக குடும்பத்துக்கு ரூ.4 ஆயிரம் வீதம் வழங்கப்படும். தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 100 நாட்களாக இருந்த பணி, 150 நாட்களாக உயர்த்தப்படும். குடும்ப பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும்.
நத்தம் பகுதியில் ஏராளமான மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு சாலை உள்ளிட்ட அடிப்படை வசதி ஏற்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நத்தத்தில் அரசு கலைக்கல்லூரி இல்லாததால் மாணவ-மாணவிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே நத்தம் பகுதியில் அரசு கலைக்கல்லூரி அமைக்க பாடுபடுவேன். கடந்த முறை என்னை பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்தீர்கள். அதுபோல், நத்தம் தொகுதியில் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தாருங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த பிரசாரத்தில் தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர் ஜெயக்குமார், ஒன்றிய செயலாளர்கள் ரத்தினக்குமார், பழனிசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜ்மோகன், பேரூர் செயலாளர் முத்துக்குமாரசாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பதுருஸ்மான், ஒன்றிய துணை செயலாளர்கள் குப்புச்சாமி, தன்ராஜ், நிர்வாகிகள் பெருமாள், ராஜகோபால், வக்கீல் சுந்தரமூர்த்தி உள்பட அனைத்து கூட்டணி கட்சி நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். முன்னதாக ஒவ்வொரு கிராமத்திலும் பொதுமக்கள், வேட்பாளர் எம்.ஏ.ஆண்டிஅம்பலத்தை கைத்தறி ஆடைகள் அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Related Tags :
Next Story