வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் திருட்டு


வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் திருட்டு
x
தினத்தந்தி 28 March 2021 8:58 PM GMT (Updated: 28 March 2021 8:58 PM GMT)

வேப்பந்தட்டை அருகே வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேப்பந்தட்டை:

நகை- பணம் திருட்டு
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கை.களத்தூர் காலனியை சேர்ந்தவர் மெய்யப்பன் மகன் நந்தீஷ்குமார் (வயது 30). இவர் கடந்த 20-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு கள்ளக்குறிச்சியில் உள்ள உறவினர் வீட்டு திருமணத்திற்கு குடும்பத்துடன் சென்றார். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு நந்தீஷ்குமார் வீட்டிற்கு திரும்பி வந்தார்.
அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த நகை மற்றும் பணம் திருட்டு போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதில் 35 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சம் திருட்டு போனதாக கூறப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக நந்தீஷ்குமார் கை.களத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு மங்களமேடு போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன்தாஸ் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் அங்கு வந்து தடயங்களை சேகரித்தனர்.
போலீசார் விசாரணை
இதைத்தொடர்ந்து நந்தீஷ்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் திருட்டு போன நகை மற்றும் பணம் நந்தீஷ்குமாரின் சகோதரியான கேரளாவில் உள்ள சசிகலா என்பவருக்கு சொந்தமானது என்றும், அந்த நகை மற்றும் பணத்தின் விவரம் சசிகலாவுக்குத்தான் முழுமையாக தெரியும், என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து போலீசார் கேரளாவில் உள்ள சசிகலாவிற்கு தகவல் தெரிவித்து அவரை நேரில் வந்து ஆஜராகுமாறு கூறியுள்ளனர். மேலும் திருட்டுபோன நகை மற்றும் பணத்தின் மதிப்பாக நந்தீஷ்குமார் கூறியது சரிதானா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story