அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் அனைத்து வீடுகளுக்கும் சூரிய மின் அடுப்புகள்‌ வழங்கப்படும்; திருவாரூர் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வம் உறுதி


அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் அனைத்து வீடுகளுக்கும் சூரிய மின் அடுப்புகள்‌ வழங்கப்படும்; திருவாரூர் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வம் உறுதி
x
தினத்தந்தி 29 March 2021 11:15 AM IST (Updated: 29 March 2021 11:11 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் அனைத்து வீடுகளுக்கும் சூரிய மின் அடுப்புகள் வழங்கப்படும் என்று திருவாரூர் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.என்.ஆர். பன்னீர்செல்வம் உறுதி அளித்தார்.

வீதி, வீதியாக சென்று வாக்குசேகரிப்பு 
திருவாரூர் சட்டசபை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.என்.ஆர்.பன்னீர் செல்வம் திருவாரூரில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். முன்னதாக அன்னை பாத்திமா ஆலயம் அருகில் கிறிஸ்தவ சமூகத்தினரை சந்தித்து வாக்கு சேகரித்தார். 

அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க. சிறுபான்மையினர் நலம் பாதுகாக்கப்படுவதை தனது கொள்கையாக  கொண்டுள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்கள் அச்சமின்றி பாதுகாப்புடன் வாழ வழிவகை செய்யப்பட்டது. தொடர்ந்து சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாத்திட அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து வெற்றிபெற செய்ய வேண்டும் என்றார். அதனை தொடர்ந்து திருவாரூர் நகராட்சி பகுதி முழுவதும் வீதி, வீதியாக திறந்த வாகனத்தில் சென்று ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வம் வாக்கு சேகரித்தார். 

அப்போது அவர் கூறியதாவது:-

மக்களின் சிரமங்கள் குறைப்பு
அ.தி.மு.க. ஆட்சி செய்த காலகட்டங்களில் மக்களின் சிரமங்கள் குறைக்கப் பட்டது. இயற்கை பேரிடரால் வறட்சி ஏற்பட்டாலும், மழை வெள்ளத்தால் பாதிப்புகள் ஏற்பட்டாலும் அந்த பாதிப்புகளில் இருந்து மக்களை உடனடியாக மீட்டெடுத்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப கூடிய பணிகளை அ.தி.மு.க. தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். 

பெண்கள் நலன் பாதுகாப்பு
மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் அனைத்து வீடுகளுக்கும் விலையில்லா சூரிய மின் அடுப்புகள் வழங்கப்படும். அ.தி.மு.க.வை பொறுத்தவரை பெண்கள் நலன் பாதுகாக்கப்படவேண்டும். பெண்களுடைய உரிமையை காப்பாற்றப்பட வேண்டும்    என்பதில் உறுதியாக உள்ளது. இதுபோன்ற திட்டங்கள் தொடர இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச்செய்ய வேண்டும். 

இவ்வாறு அவர் பேசினார். அவருடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Next Story