அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வால் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு தயாராகும் மக்கள் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ.


கொடைக்கானல் மேல்மலை பகுதியில் பழனி தொகுதி தி.மு.க. வேட்பாளர் இ.பெ.செந்தில்குமார் பிரசாரம்
x
கொடைக்கானல் மேல்மலை பகுதியில் பழனி தொகுதி தி.மு.க. வேட்பாளர் இ.பெ.செந்தில்குமார் பிரசாரம்

அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வால் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு தயாராகும் மக்கள் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. பேச்சு

கொடைக்கானல்,
தமிழகத்தில் விலைவாசி உயர்வால் ஆட்சி மாற்றத்துக்கு மக்கள் தயாராகி வருகின்றனர் என்று கொடைக்கானல் மேல்மலை கிராமத்தில் பிரசாரம் செய்தபோது இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. பேசினார்.

விலைவாசி உயர்வு
பழனி தொகுதி தி.மு.க. வேட்பாளராக இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. மீண்டும் போட்டியிடுகிறார். இவர் கடந்த 3 நாட்களாக கொடைக்கானல் பகுதியில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி நேற்று அவர் மேல்மலை கிராமங்களான பூம்பாறை, பூண்டி, கவுஞ்சி, பழம்புத்தூர் கிராம பகுதிகளில் திறந்தவேனில் நின்றபடியும், வீதி, வீதியாக சென்றும் வாக்கு சேகரித்தார். 

பிரசாரத்தின்போது பொதுமக்களிடையே அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க.வின் மக்கள் விரோத ஆட்சி நடைபெற்று வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சமையல் எண்ணெய் விலை தினமும் உயர்ந்து வருகிறது. கடந்த தி.மு.க. ஆட்சியில் ரூ.70 விற்ற சமையல் எண்ணெய் தற்போது ரூ.150 விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் பெட்ரோல்-டீசல், கியாஸ் சிலிண்டர் விலை நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் உள்ளது. இதனால் ஏழை, நடுத்தர என அனைத்து தரப்பு மக்களும் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

ஆட்சி மாற்றத்துக்கு தயார்
இதனால் மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு தயாராகி விட்டனர். எனவே வரும் தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சியை அமைக்கும். கொடைக்கானல் மேல்மலை பகுதியில் கூடுதலாக அணைகள் கட்ட வேண்டுமென பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் மேல்மலை பகுதியில் 5 அணைகள் கட்டப்பட்டு, ஊராட்சி பகுதிகளில் தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் மக்கள் நலத்திட்டங்களையே தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளாக அறிவித்துள்ளது. குறிப்பாக கொரோனா நிவாரணமாக ரேஷன்கார்டுதாரருக்கு ரூ.4 ஆயிரம், விவசாயிகளின் கூட்டுறவு வங்கிக்கடன், சுயஉதவிக்குழு கடன், பெண்களுக்கு இலவச பஸ்பாஸ், மாதாந்திர உதவித்தொகை ரூ.1000 ஆகியவை கட்டாயம் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் பேசினார். 

பிரசாரத்தில் திண்டுக்கல் எம்.பி வேலுசாமி, மேல்மலை ஒன்றிய செயலாளர் ராஜதுரை, ஒன்றியக்குழு துணைத்தலைவர் முத்துமாரி, சுரேஷ்பாண்டி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கண்ணன், கலை-இலக்கியஅணி துணை அமைப்பாளர் தங்கப்பாண்டி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story