அண்ணா நகரில் தம்பியை கத்தியால் குத்திக்கொன்ற செருப்பு தைக்கும் தொழிலாளி


அண்ணா நகரில் தம்பியை கத்தியால் குத்திக்கொன்ற செருப்பு தைக்கும் தொழிலாளி
x
தினத்தந்தி 31 March 2021 4:42 AM IST (Updated: 31 March 2021 4:42 AM IST)
t-max-icont-min-icon

அண்ணா நகரில் கடையில் இருந்த கருவியை கேட்காமல் எடுத்து சென்றதால் ஆத்திரமடைந்த செருப்பு தைக்கும் தொழிலாளி தம்பியை கத்தியால் குத்தி கொலை செய்தார்.

பூந்தமல்லி, 

அரும்பாக்கத்தை சேர்ந்தவர் இருதயம் (வயது 32). இவரது தம்பி லூர்துசாமி (28). இவர்கள் இருவரும் அண்ணாநகர் பகுதியில் சாலையோரம் தனித்தனியாக செருப்பு தைக்கும் கடையை அமைத்து நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை இருதயம் கடையிலிருந்த செருப்பு தைக்க உதவும் கருவியை லூர்துசாமி அவரது அண்ணனிடம் சொல்லாமல் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இருதயம் எதிரில் உள்ள லூர்துசாமி கடைக்கு சென்று அவரிடம் ‘என்னை கேட்காமல் ஏன் செருப்பு தைக்கும் கருவியை எடுத்தாய்?’ என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனால் அண்ணன், தம்பி இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரம் அடைந்த இருதயம் கடையில் செருப்பு தைக்க பயன்படுத்தும் கத்தியை எடுத்து லூர்துசாமியின் கழுத்தில் சராமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்ததில் மயங்கி கிடந்த லூர்து சாமியை அங்கிருந்தவர்கள் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி லூர்துசாமி பரிதாபமாக இறந்துபோனார்.

இந்த சம்பவம் குறித்து அண்ணாநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அண்ணா நகர் இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் இறந்து போன லூர்து சாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தம்பியை குத்திக் கொலை செய்துவிட்டு தலைமறைவான இருதயத்தை தேடி வருகின்றனர்.

Next Story