தமிழகத்தில் விரைவில் நல்லாட்சி மலரும் ஆண்டிஅம்பலம் எம்.எல்.ஏ. பேச்சு


தமிழகத்தில் விரைவில் நல்லாட்சி மலரும் ஆண்டிஅம்பலம் எம்.எல்.ஏ. பேச்சு
x
தினத்தந்தி 31 March 2021 10:58 AM IST (Updated: 31 March 2021 10:58 AM IST)
t-max-icont-min-icon

தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட நத்தம் தி.மு.க.வேட்பாளர் ஆண்டிஅம்பலம்.

செந்துறை, 

நத்தம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளராக தற்போதைய எம்.எல்.ஏ. ஆண்டிஅம்பலம் மீண்டும் போட்டியிடுகிறார். கடந்த சில நாட்களாக இவர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார். நேற்று அவர் நத்தம் சந்தனகருப்பு கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பிரசாரத்தை தொடங்கினார். 

தொடர்ந்து வேலம்பட்டி, சேர்வீடு, புதுப்பட்டி, குமரபட்டி, பாதசிறுகுடி, மாம்பட்டி, நடுவனூர், அப்பாஸ்புரம், மீனாட்சிபுரம், காமராஜ்நகர், அசோக்நகர், கோவில்பட்டி, செங்குளம், ஆவிச்சிபட்டி, நத்தம் பஸ்நிலையம் உள்ளிட்ட இடங்களில் வீதி, வீதியாக சென்று உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். பின்னர் பொதுமக்களிடையே அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் பெட்ரோல்-டீசல், கியாஸ் சிலிண்டர் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. இந்த விலைவாசி உயர்வால்  ஏழை, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. இதனால் மக்கள் நல்லாட்சியை விரும்புகின்றனர். அதற்கான நேரமும் வந்து விட்டது. விலைவாசி உயர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வருகிற 6-ந்தேதி மக்கள் தயாராகி விட்டனர்.

நத்தம் தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். விவசாயத்தை மேம்படுத்த நீர்நிலைகளில் ஆய்வு செய்து ஆக்கிரமிப்பு அகற்றப்படும். நத்தம் மலையடிவார பகுதியில் தேவையான இடங்களில் தடுப்பணைகள் அமைக்க ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

பிரசாரத்தில் வடக்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜ்மோகன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பதுருஸ்மான், ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர் அழகர்சாமி, மாவட்ட பிரதிநிதி அய்யனார், கணேசன், ஊராட்சி தலைவர்கள் பழனியம்மாள் மகாலிங்கம், ரேவதி அழகர்சாமி, துர்காசங்கீதா பிரசாத், நிர்வாகிகள் ராஜகோபால், வக்கீல் சுந்தரமூர்த்தி, ஒன்றிய துணைசெயலாளர் தன்ராஜ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். 

Next Story