கிராமப்புறங்களை மேம்படுத்த அ.தி.மு.க. ஆட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தகவல்


கிராமப்புறங்களை மேம்படுத்த அ.தி.மு.க. ஆட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தகவல்
x
தினத்தந்தி 31 March 2021 11:53 AM IST (Updated: 31 March 2021 11:53 AM IST)
t-max-icont-min-icon

கிராமப்புறங்களை மேம்படுத்த அ.தி.மு.க. ஆட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் போட்டியிடுகிறார். கடந்த சில நாட்களாக தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அவர் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அவர் செல்லும் இடங்கள் எல்லாம் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். இதேபோல் மாற்று கட்சியினரும் அ.தி.மு.க.வில் ஆர்வமுடன் இணைந்து வருகின்றனர். அதன்படி நேற்று திண்டுக்கல் நகர தே.மு.தி.க. துணைச்செயலாளர் பாலு, நிர்வாகிகள் பிரகாஷ், ராமலிங்கம், மாணிக்கம், செல்வம், சுரேஷ் நாகேந்திரன், அ.ம.மு.க. தெற்கு பகுதி தலைவர் கோபாலகிருஷ்ணன், 35வது வார்டு தி.மு.க. உறுப்பினர் பாலகிருஷ்ணன் ஆகியோர் அந்த கட்சிகளில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

இதற்கிடையே திண்டுக்கல் நகர் பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகர்களையும், மும்மத தலைவர்களையும் சந்தித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆதரவு கேட்டு வருகிறார். அப்போது அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்கள், சாதனைகளை எடுத்து கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இதுதொடர்பாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாவது:

திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் அவ்வப்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களின் அடிப்படை தேவைகளை அறிந்து அவற்றை தங்கு தடையின்றி நிறைவேற்றி வருகிறேன். திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் திண்டுக்கல் மாநகராட்சி மற்றும் 9 கிராம ஊராட்சிகள் உள்ளன. இங்கு மக்களுக்கான பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. குறிப்பாக கிராமப்புறங்களை மேம்படுத்தும் வகையில் அ.தி.மு.க. ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. 

கிராமங்களில் அடிப்படை தேவைகளான குடிநீர், சாலை, சுகாதாரம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து, தன்னிறைவு பெற்ற கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளன. எந்த கிராமத்திலும் தற்போது குடிநீர் தட்டுப்பாடு என்பது அறவே இல்லை. அதோடு நகர் புறங்களுக்கு இணையாக கிராமங்களிலும் சாலை வசதி மேம்படுத்தப்பட்டுள்ளன. 

அந்தவகையில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி, உட்கட்டமைப்பு நிதி, பொதுநிதி மற்றும் மத்தியமாநில அரசுகளின் நேரடி திட்டங்களால் கிராமங்கள் அபரீத வளர்ச்சி அடைந்துள்ளன. குறிப்பாக திண்டுக்கல் நகரை ஒட்டியுள்ள பாலகிருஷ்ணாபுரம், செட்டிநாயாக்கன்பட்டி, கோவிலூர் ஊராட்சிகளில் உள்ள கிராமங்களில் பயணிகள் நிழற்குடை, ஆழ்துளை கிணறு அமைத்து மோட்டார்கள் பொருத்துதல், தடுப்பணைகள் அமைத்தல் மற்றும் மராமத்து செய்தல், கழிவுநீர் கால்வாய், கலையரங்கம், பாலங்கள், சுகாதார வளாகம் அமைத்தல், தெருக்களில் பேவர்பிளாக் கற்கள் பதித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அதேபோல் மாநிலம் முழுவதும் கடந்த 10 ஆண்டு காலமாக அ.தி.மு.க. அரசு மக்களுக்கான நலத்திட்டங்களை சிறப்பான முறையில் செய்துள்ளது. இதனால் மக்கள் இந்த நல்லாட்சியையே விரும்புகின்றனர். குறிப்பாக தமிழகத்தை முன்மாதிரி மாநிலமாக கொண்டு செல்வதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. எனவே மீண்டும் நல்லாட்சி அமைய மக்கள் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

மாற்றுக்கட்சியினர் இணையும் நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர் மருதராஜ், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் ராஜ்மோகன், ஜெயலலிதா பேரவை செயலாளர் பாரதிமுருகன், பகுதி செயலாளர்கள் மோகன், சுப்பிரமணி, சேசு, தெற்குபகுதி துணை செயலாளர் மாரிமுத்து, 35வது வார்டு செயலாளர் மோகன்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story