கம்பத்தில் ஆயத்த ஆடை பூங்கா, அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படும் அ.தி.மு.க. வேட்பாளர் சையதுகான் உறுதி
கம்பத்தில் ஆயத்த ஆடை பூங்கா, அரசு கலை-அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என்று அ.தி.மு.க வேட்பாளர் சையதுகான் உறுதி அளித்துள்ளார்.
உத்தமபாளையம்,
கம்பம் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் சையதுகான் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி நேற்று கம்பம் நகரில் உள்ள பத்ரகாளியம்மன் கோவில் தெரு, மந்தையம்மன் கோவில் தெரு, நேதாஜி தெரு, கோம்பை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வீதி, வீதியாக சென்று இரட்டைஇலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். அப்போது அங்கு திரண்டிருந்த மக்கள் மத்தியில் சையதுகான் பேசியதாவது:-
கம்பம் சுற்று வட்டார மக்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்க கம்பத்தில் ஆயத்த ஆடை பூங்கா அமைக்கப்படும். இதன் மூலம் ரெடிமேட் ஆடை உற்பத்தி அதிகரிக்கும். கம்பம் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும். இதன்மூலம் மக்களுக்கு சிறப்பான சிகிச்சை வழங்கப்படும். இதேபோல் நகர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை பிரிவு மற்றும் ஸ்கேன் வசதி செய்து தரப்படும்.
10 ஆண்டுகளுக்கு மேலாக புறம்போக்கு நிலத்தில் குடியிருப்போருக்கு அரசு விதிமுறைப்பட்டி வீட்டுமனை பட்டா வழங்கப்படும். கிராமப்புற மாணவர்களின் நலன் காக்கும் வகையில் கம்பத்தில் அரசு கலை-அறிவியல் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுப்பேன். அதுபோல் உயர்படிப்பு, அரசு பணிக்கு தயாராகும் மாணவர்களுக்காக போட்டி தேர்வுக்கான பயிற்சி மையம் தொடங்கப்படும். கம்பம் நகரில் சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்வேன். ஆகவே மக்கள் நல்லாட்சியை பெற அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பிரசாரத்தில் ஜக்கையன் எம்.எல்.ஏ., நகர செயலாளர் ஜெகதீஷ், த.மா.கா. மாநில செயற்குழு உறுப்பினர் குமரேசன், கம்பம் நகர்மன்ற முன்னாள் தலைவர் சிவகுமார், உத்தமபாளையம் ஒன்றிய செயலாளர் அழகுராஜா, கம்பம் ஒன்றிய செயலாளர் இளையநம்பி மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story