ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் - தீவிர ஓட்டு வேட்டை


ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ்  - தீவிர ஓட்டு வேட்டை
x
தினத்தந்தி 31 March 2021 6:30 PM GMT (Updated: 31 March 2021 3:26 PM GMT)

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் தீவிர ஓட்டு வேட்டை நடத்தி வருகிறார்.

ஏரல், 

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் கிராமம், கிராமமாக சென்று தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டுள்ளார். அப்போது விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை சந்தித்து கை சின்னத்துக்கு ஆதரவு திரட்டி வருகிறார். பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் திரண்டு நின்று பட்டாசு வெடித்தும், மேளதாளங்கள் முழங்கவும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய பகுதியான ராமசாமிபுரத்தில் பிரசாரத்தை தொடங்கிய அவர் திருப்பணிசெட்டிகுளம், வலசைகாரன்விளை, கொத்தலரிவிளை, சக்கம்மாள்புரம், சண்முகபுரம் புதுநயினார்புரம், மொட்டதான்விளை, காமராஜர் நல்லூர், கோட்டைக்காடு, திருவழுதிநாடார்விளை, ஏரல், வாழவல்லான், கொற்கை, கொற்கை மணலூர், அக்காசாலை, முக்காணி உள்பட பகுதியில் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் என்னுடைய தந்தை ஊர்வசி செல்வராஜ் எம்.எல்.ஏ.வாக இருந்த போது ஏராளமான நலத் திட்டங்களை நிறைவேற்றினார். அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் வசதி, சாலை வசதி செய்து கொடுத்தார். புதிய பாலங்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், சமுதாய நலக்கூடம், நூலகம், பள்ளிக்கூட வகுப்பறைகள் போன்றவற்றை அமைத்து கொடுத்தார். அவரது வழியில் நானும் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்று மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றுவேன்.

தமிழகத்தில் 10 ஆண்டுகளாக மக்களின் அடிப்படை வசதி கோரிக்கைகளை ஒன்றும் நிறைவேற்றவில்லை. சிறு, சிறு தொழில்கள் மூடப்பட்டுள்ளன. பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உச்சிக்கு சென்று கொண்டுள்ளது. மக்களை பற்றி கவலைப்படாத ஒரு அரசு செயல்பட்டு வருகிறது. இப்பகுதி விவசாயம் நிறைந்த பகுதியாக உள்ளது. ஆனால் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டத்தால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சட்டத்துக்கு விவசாயிகள், காங்கிரஸ், தி.மு.க தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறோம்.

விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் தண்ணீர் கிடைத்திட ஏற்பாடு செய்வேன். இந்த அரசு பாரதீய ஜனதா அரசின் அடிமையாக உள்ளது. நீட் தேர்வில் ஏழை மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு எட்டாக்கனியாக உள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பணியிடங்கள் வெளிமாநிலத்தவர்கள் வேலைக்கு சேர்கிறார்கள். இதனால் தமிழக இளைஞர், பெண்களும் வேலை இல்லாமல் தவிக்கின்றனர்.

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன் பெறும் வகையில் பல்வேறு நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக மக்கள் முடிவு செய்துவிட்டனர். மக்கள் விரோத ஆட்சிக்கு முடிவு கட்டவும், தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி அமையவும் அனைவரும் கை சின்னத்தில் வாக்களித்து என்னை அமோகமாக வெற்றிபெற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவர் அவர் பேசினார்.

பிரசார நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் பி.ஜி.ரவி, தெற்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் சுந்தரராஜன், மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் ராயப்பன், அனஸ், பாலமுருகன், வேங்கையன், பழையகாயல் கூட்டுறவு சங்க தலைவர் ஜெய்சங்கர், நகர செயலாளர்கள் சாயர்புரம் அறவாழி, ஏரல் பார்த்திபன், ஏரல் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் பாலகிருஷ்ணன், ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜவேலு, ஏரல் நகர இளைஞரணி முகம்மது பக்மி, மாவட்ட பிரதிநிதி செந்தில் ஆறுமுகம், சிறுத்தொண்டநல்லூர் கொற்கைமாறன், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெயசீலன் துரை, வட்டார தலைவர்கள் தாசன், சொரிமுத்து பிரதாபன், ஏரல் நகர காங்கிரஸ் தலைவர் பாக்கர்அலி, ஸ்ரீவைகுண்டம் யூனியன் கவுன்சிலர் பாரத், முன்னாள் ஓ.பி.சி மாவட்ட தலைவர் ஜெயக்கொடி, ஏரல் பிஸ்மி சுல்தான், அந்தோணி காந்தி, காமராஜ் காந்தி பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story