இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
ராமநாதபுரம்
விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
விபத்தில் இறப்பு
மண்டபம் அருகே உள்ள சாத்தக்கோன்வலசையை சேர்ந்தவர் குமரேசன் (வயது45). இவர் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் 16-ந் தேதி அரியமான் விலக்கு ரோடு அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு விரைவு பஸ் மோதியதில் குமரேசன் இறந்தார். இதைதொடர்ந்து கணவரின் இறப்பிற்கு ரூ.40 லட்சம் இழப்பீடு கோரி அவரின் மனைவி மல்லிகா ராமநாதபுரம் மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கினை விசாரித்த கோர்ட்டு, ரூ.18 லட்சம் இழப்பீடாக வழங்க சென்னை அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டது. இந்த தொகையை இதுவரை வழங்காததால் மல்லிகா மாவட்ட கோர்ட்டில் நிறைவேற்றக்கோரும் மனு தாக்கல் செய்தார்.
அரசு பஸ் ஜப்தி
இந்த மனுவை விசாரித்த மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம், வட்டியுடன் சேர்த்து ரூ.20 லட்சத்து 72 ஆயிரத்து 283-ஐ இழப்பீடாக வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து கோர்ட்டு ஊழியர்கள் ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தில் சென்னை செல்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு விரைவு பஸ்சை ஜப்தி செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர். இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் வக்கீல் தேவபிரிதி தினகரன் ஆஜரானார்.
Related Tags :
Next Story