332 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா கவனிப்பு மையம் அமைப்பு
கடலூர் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை பரவ தொடங்கியுள்ளதையொட்டி 332 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா கவனிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தெரிவித்துள்ளார்.
கடலூர்,
கொரோனா வைரஸ் 2-வது அலை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம், கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கி, கொரோனா 2-வது அலை பரவலை தடுப்பதற்கான பல்வேறு விதமான ஆலோசனைகளை அனைத்து துறை அலுவலர்களுக்கும், ஆலோசனை வழங்கினார்.
அப்போது அவர் கூறுகையில், கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நோயாளிகள் ஆம்புலன்ஸ் மூலமாக அருகில் உள்ள தனிமைப்படுத்தும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, பரிசோதனைக்கு உட்படுத்தப்படவேண்டும். நோய் அறிகுறிகள் இல்லாதவர்கள் கொரோனா கவனிப்பு மையத்திற்கும், நோய் அறிகுறியுடன் உள்ளவர்கள் கடலூர் அரசு பொது மருத்துவமனை மற்றும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்படவேண்டும்.
படுக்கை வசதிகள்
ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அதில் இருந்து மீண்டவர்களில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட நபர்கள் நோய் அறிகுறி அற்றவர்களாக இருக்கின்றனர். அதனால் கொரோனா கவனிப்பு மையங்கள், இதற்கு ஏற்ப செயல்படுத்திட ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும்.
இதையொட்டி முதற்கட்டமாக இன்று (அதாவது நேற்று) கடலூர் கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரியில் 200 படுக்கை வசதிகளும், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் உள்ள கோல்டன் ஜூப்லி மாணவர்கள் தங்கும் விடுதியில் 132 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா கவனிப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது பரவிவரும் 2-வது அலையில் நோய் பரவுதல் அதிகரித்து வருவதும், நோய் கண்டவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்குள் தொற்று பரவலும் அதிகமாக காணப்படுகிறது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடைய நோய் அறிகுறிகள், அவருடைய குடும்ப நபர்களுடைய விவரங்களையும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களின் விவரங்களையும் சேகரிக்க வேண்டும். மேலும் சளி மாதிரியை சேகரித்து கொரோனா பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும்.
கவனிப்பு மையம்
அந்தந்த வட்டார மருத்துவ அலுவலர்கள் காய்ச்சல் முகாம்கள் நடத்தி நோய் அறிகுறி உள்ளவர்கள் மற்றும் நோய் கண்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும், அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களுக்கும் சளி மாதிரி எடுத்து, ஆய்வுக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். நோய் கண்டவர்களை வகைப்படுத்தும் மையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். நோய் அறிகுறி இல்லாதவர்களை கொரோனா கவனிப்பு மையத்திற்கு அனுப்பி வைத்தல் போன்ற தொடர் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மாவட்ட சித்த மருத்துவ அலுவலர், கொரோனா கவனிப்பு மையத்தில் நோயாளிகளுக்கு சித்தா மருத்துவ முறைகளில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்திட வேண்டும்.
வணிக நிறுவனங்களுக்கு அபராதம்
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க தவறும் வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு பொது சுகாதார சட்டத்தின் கீழ் அபராதம் விதிப்பதை மேம்படுத்தி, பொதுமக்களுக்கு இதன் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.
சட்டமன்ற தேர்தலில் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் கொரோனா தடுப்பு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து பொதுமக்களுக்கு நோய் பரவாத வகையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்திட வேண்டும் என்றார்.
இதில் ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் மகேந்திரன், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு, சுகாதார பணிகள் இணை இயக்குனர் செந்தில்குமார், ராஜா முத்தையா மருத்துவமனை கண்காணிப்பாளர் நிர்மலா, கடலூர் நகராட்சி ஆணையாளர் ராமமூர்த்தி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story