வாகன சோதனையில் ஈடுபடும் பறக்கும் படையில் துணை ராணுவவீரர்கள் சேர்ப்பு


வாகன சோதனையில் ஈடுபடும் பறக்கும் படையில் துணை ராணுவவீரர்கள் சேர்ப்பு
x
தினத்தந்தி 31 March 2021 7:40 PM GMT (Updated: 31 March 2021 7:40 PM GMT)

வாகன சோதனையில் ஈடுபடும் பறக்கும் படையில் துணை ராணுவவீரர்கள் சேர்ப்பு

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் அசம்பாவிதங்கள் இன்றி நடைபெற முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட காவல்துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள். வாக்குப்பதிவின் போது கட்சியினர் இடையே மோதல், கலவரம் உள்ளிட்டவை நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு பணியில் துணை ராணுவப்படையினர் ஈடுபட உள்ளனர். இதற்காக வேலூர் மாவட்டத்துக்கு முதற்கட்டமாக 2 கம்பெனி துணை ராணுவப்படையும், 2-ம் கட்டமாக 5 கம்பெனி துணை ராணுவப்படையும் பல்வேறு மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளன. 7 கம்பெனியில் 600-க்கும் மேற்பட்ட துணை ராணுவவீரர்கள் இடம் பெற்றிருந்தனர். அவர்கள் வேலூர், காட்பாடியில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் அவர்கள் நேற்று முன்தினம் தொகுதி வாரியாக பிரித்து அனுப்பி வைக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் வாகன சோதனையில் ஈடுபடும் பறக்கும்படை, நிலை கண்காணிப்பு குழுவில் தலா ஒரு ராணுவவீரர்கள் சேர்க்கப்பட்டனர். நேற்று முன்தினம் மாலை முதல் துணை ராணுவவீரர்கள் பறக்கும்படை, நிலை கண்காணிப்பு குழுவினருடன் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். 
மேலும் சிலர் மாவட்ட எல்லை சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவு தினத்தன்று பதற்றமான வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்குச்சாவடி மையங்களில் துணை ராணுவவீரர்கள் பாதுகாப்பு பணி மேற்கொள்ள உள்ளனர் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story