வாக்கு எண்ணிக்கை மையத்தில் முன்னேற்பாடு
சட்ட மன்ற தேர்தலை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட சட்ட மன்ற தொகுதியில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் கல்லூரி பகுதியில் முன்னேற்பாடு பணிகள் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது.
காரைக்குடி,
சட்ட மன்ற தேர்தலை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட சட்ட மன்ற தொகுதியில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் கல்லூரி பகுதியில் முன்னேற்பாடு பணிகள் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது.
தடுப்பு வேலி
தமிழகத்தில் சட்ட மன்ற தேர்தல் வருகிற 6-ந்தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை வருகிற மே மாதம் 2-ந்தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையொட்டி தற்போது தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் தீவிரமாக பிரசாரம் செய்து வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை (தனி) ஆகிய 4 சட்ட மன்ற தொகுதிகள் உள்ளன. இந்த சட்ட மன்ற தொகுதியில் பதிவாகும் வாக்குகள் எண்ணிக்கை காரைக்குடி அழகப்பா அரசு பொறியியல் கல்லூரி மற்றும் அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய இடங்களில் வருகிற மே மாதம் 2-ந்தேதி எண்ணப்படுகிறது.
இதையொட்டி தற்போது அங்கு மின்னணு வாக்கு பெட்டி வைக்கும் அறை, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடம் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தை சுற்றிலும் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இதில் அழகப்பா பொறியியல் கல்லூரி முதல்தளத்தில் இடதுபுறத்தில் திருப்பத்தூர் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடமாகவும், வலது புறத்தில் அந்த தொகுதிக்கான மின்னணு எந்திரம் வைக்கும் இடமாகவும் அமைக்கப்பட்டு உள்ளது.
இதேபோல் டிராயிங் ஹால் மேல் பகுதியில் காரைக்குடி தொகுதிக்கான மின்னணு வாக்கு பெட்டி வைக்கும் இடமாகவும், கீழ் பகுதியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடமாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் முருகப்பா அரங்கின் கீழ் பகுதியில் மானாமதுரை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடமாகவும், மேல் தளத்தில் மின்னணு வாக்கு எந்திரம் வைக்கும் இடமாகவும் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
தபால் ஓட்டுகள்
அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரியில் சிவகங்கை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மற்றும் அந்த தொகுதிக்கான மின்னணு வாக்கு பெட்டிகள் வைக்கும் இடமாகவும் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து இந்த பகுதியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தில் பார்வையாளர்கள், வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் அமரும் இடம் என பிரிக்கப்பட்டு அதன் நடுவில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இதேபோல் மின்னணு வாக்கு பெட்டிகள் வைக்கும் அறையின் ஜன்னல்கள், கதவுகளில் காற்று புகாத வகையில் சுற்றிலும் பலகையால் வைத்து அடைக்கப்பட்டு உள்ளது. மேலும் பதிவான மின்னணு பெட்டிகள் வைப்பதற்காக வரிசையாக கட்டம் வரையப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. இதேபோல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தை சுற்றிலும் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
ஆய்வு
மேலும் தபால் ஓட்டுகள் வைப்பதற்காக பலகைகள் தயார் செய்யும் பணியும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அழகப்பா பொறியியல் கல்லூரியின் முகப்பு பகுதியில் அனைத்து பகுதியில் பொருத்தப்படும் கண்காணிப்பு கேமராக்களின் கட்டுப்பாட்டு அறை அமைப்பதற்காக பந்தல் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த பணிகள் ஏறத்தாழ 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. இன்னும் 2 அல்லது 3 நாட்களில் அனைத்து பணிகளும் நிறைவு பெறும் தருவாயில் உள்ளது.
தற்போது இங்கு நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான மதுசூதன்ரெட்டி மற்றும் தேர்தல் பார்வையாளர்கள், வருவாய்த்துறையினர் நேரடியாக கண்காணித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story