கருவலூர் மாரியம்மன் கோவில் தேரோட்டம்


கருவலூர் மாரியம்மன் கோவில் தேரோட்டம்
x
தினத்தந்தி 1 April 2021 3:02 AM IST (Updated: 1 April 2021 3:02 AM IST)
t-max-icont-min-icon

அவினாசி அருகே பிரசித்தி பெற்ற கருவலூர் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

அவினாசி
அவினாசி அருகே பிரசித்தி பெற்ற கருவலூர் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
 கருவலூர் மாரியம்மன் கோவில்
திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியம் கருவலூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. 
இதையொட்டி கடந்த 26-ந் தேதி கிராம சாந்தி நிகழ்ச்சியுடன் தேரோட்ட விழா தொடங்கியது. 27-ந் தேதி கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. 30-ந் தேதி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று காலை 6 மணி அளவில் மேளதாளம் முழங்க சுவாமி தேரில் எழுந்தருளினார். 
தேரோட்டம்
இதைத்தொடர்ந்து பக்தர்கள் தேரில் ஏறி சாமி தரிசனம் செய்தனர். பின்னர் மாலை 5 மணி அளவில் தாரை தப்பட்டை முழங்க தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இதில் கருவலூர், நம்பியாம் பாளையம், சுண்டக்காம்பாளையம், வெள்ளியம்பாளையம், ஆட்டையம்பாளையம், அவினாசி, வேலாயுதம்பாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த சிறுவர், சிறுமியர் பெண்கள் உள்ளிட்ட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். 
தேர் நிலையிலிருந்து சிறிது தூரம் இழுக்கப்பட்டு நிறுத்தப்பட்டது மீண்டும் இன்றும், நாளையும் வியாழன், வெள்ளி தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. இதையடுத்து 3-ந் தேதி பரிவேட்டை, தெப்பத்தேர் விழாவும் நடக்கிறது. 4-ந்தேதி சாமி தரிசனம், மற்றும் மஞ்சள் நீர் விழாவுடன் தேரோட்டம் நிறைவடைகிறது.
தேரை சுத்தம் செய்யாமல்
தேர்த்திருவிழா நடைபெறும் சமயத்தில் பெரிய தேர் மற்றும் விநாயகர் தேர் ஆகியவைகள் தண்ணீர் ஊற்றி நன்றாக சுத்தம் செய்த பின்னரே தேரோட்டம் நடத்துவது வழக்கத்தில் உள்ளது. ஆனால் இந்த ஆண்டு தேரை சுத்தம் செய்யாமல் அப்படியே தேரோட்டம் நடத்தியதாக பா.ஜ.க. மாவட்ட செயலாளர் கபில்தேவ் குற்றம்சாட்டியுள்ளார்.  
இது குறித்து அவர் கூறுகையில், பெரிய தேர் முழுமையாக கழுவி சுத்தம் செய்யாமல் பெயரளவில் மட்டுமே சுத்தம் செய்யப்பட்டது. மேலும் விநாயகர் தேர் புழுதி மண்டி கிடக்கிறது. அப்படியே அதில் விநாயகர் வைக்கப்பட்டுள்ளது. இது பற்றி கோவில் செயல் அலுவலர் சந்திரமோகனிடம் கேட்டால் முறையாக பதில் தரவில்லை. இது பக்தர்களிடையேஅதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
இது குறித்து கோவில் நிர்வாகத்திடம் கேட்டபோது தேரோட்டம் நடைபெறும்போது பெரிய தேர், விநாயகர் தேர் அனைத்தும் நன்றாக கழுவி சுத்தம் செய்து தான் தேரோட்டம் நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் கடந்த சில தினங்களுக்கு முன்பாகவே அனைத்து தேர்களும் தண்ணீர் ஊற்றி முழுமையாக சுத்தம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் தேர்நிலையை சுற்றி மளிகை கடைகள், பொரி கடைகள், மிட்டாய், பழ கடைகள், பூக்கடைகள் என அடுத்தடுத்து ஏராளமாக உள்ளது அந்த கடைகளின் வாசல்களில் தினசரி குப்பைகளை கூட்டி பெருக்குவதால் அதிலிருந்து மண்புழுதி மீண்டும் தேரில் படர்ந்து விடுகிறது என்றனர். 

Next Story