போடி தொகுதியில் தீவிர பிரசாரம்: தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுவோம் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு


போடி தொகுதியில் தீவிர பிரசாரம்: தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுவோம் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
x
தினத்தந்தி 1 April 2021 9:54 AM IST (Updated: 1 April 2021 9:54 AM IST)
t-max-icont-min-icon

போடி தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுவோம் என்று தெரிவித்தார்.

தேனி, 

போடி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக துணை முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். போடி தொகுதியில் அவர் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் அவருக்காக தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.-

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போடி ஜெயம் நகர், முந்தல், போடிமெட்டு, கொட்டக்குடி, குரங்கணி ஆகிய இடங்களில் நேற்று காலை தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். குரங்கணி, கொட்டக்குடி, போடிமெட்டு பகுதிகளில் வீடு, வீடாக சென்று ஓ.பன்னீர்செல்வம் வாக்குசேகரித்தார். அவருக்கு பொதுமக்கள் திரண்டு வந்து வரவேற்பு அளித்தனர். இந்த பிரசாரத்தின் போது ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் ஏழை, எளிய மக்களுக்கான நல்லாட்சியை நடத்தினார்கள். அவர்களின் வழியில் தற்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நல்லாட்சி நடந்து கொண்டு இருக்கிறது. 2006-ம் ஆண்டு தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ஏழை, எளிய மக்களுக்கு 2 ஏக்கர் நிலம் தருவதாக சொன்னார்கள். ஆனால், கையளவு நிலம் கூட கொடுக்கவில்லை.

ஆனால், 2011-ம் ஆண்டு அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ஏழை பெண்களின் திருமணத்துக்கு தாலிக்கு தங்கம், திருமண நிதி உதவி வழங்கப்படும் என்றும், விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கப்படும் என்றும் ஜெயலலிதா அறிவித்தார். ஆட்சிக்கு வந்தவுடன் அந்த திட்டங்களை முழுமையாக நிறைவேற்றினார். அரிசி அட்டை வைத்து இருக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கப்பட்டது. தாலிக்கு 4 கிராம் தங்கம் மற்றும் திருமண நிதி உதவி வழங்கப்பட்டது.

2016-ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியில் தாலிக்கு 4 கிராம் தங்கம் என்பதை 8 கிராமாக உயர்த்தி வழங்குவோம் என்று ஜெயலலிதா அறிவித்தார். அந்த திட்டத்தையும் அ.தி.மு.க. அரசு தொடர்ந்து செயல்படுத்தி, தாலிக்கு 8 கிராம் தங்கம் மற்றும் திருமண நிதி உதவி வழங்கி வருகிறது.

தற்போதைய அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ஏழை, எளிய குடும்பத்தினர் அனைவருக்கும் விலையில்லா வாஷிங்மெஷின் தருவோம் என்று சொல்லி இருக்கிறோம். நிச்சயம் அதை நிறைவேற்றுவோம். திருமண நிதிஉதவியை ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.35 ஆயிரமாகவும், படித்து பட்டதாரி பெண்களுக்கான திருமண நிதிஉதவியை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.60 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்குவோம். அம்மா குலவிளக்கு திட்டத்தின் கீழ் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,500 வழங்குவோம். தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுவோம்.

போடி சட்டமன்ற தொகுதியில் அரசு பொறியியல் கல்லூரி, அரசு சட்டக்கல்லூரி, அரசு கலை-அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, ஐ.டி.ஐ., கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் போன்றவை கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏழை, எளிய மாணவ, மாணவி   கள் குறைந்த செலவில் உயர்கல்வி கற்று வருகின்றனர்.
கடந்த 2 முறை இந்த தொகுதியில் என்னை வெற்றி பெறச் செய்தீர்கள். உங்களில் ஒருவனாக இருந்து தொகுதியின் வளர்ச்சிக்கு நல்ல பல திட்டங்களை நிறைவேற்றிக் கொடுத்துள்ளேன். மீண்டும் உங்களில் ஒருவனாக இருந்து சேவையாற்ற இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

போடி நகரில் தே.மு.தி.க.வில் இருந்து விலகிய சுமார் 300 பேர் நேற்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் அ.தி.மு..க.வில் இணைந்தனர். அவர்களை ஓ.பன்னீர்செல்வம் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் ப.ரவீந்திரநாத் எம்.பி., அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் புகழேந்தி, ஒன்றிய செயலாளர் சற்குணம் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story