மக்களின் கோரிக்கையை ஏற்று வீடுகள் எதுவும் இடிக்கப்படாது தஞ்சை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அறிவுடைநம்பி உறுதி


மக்களின் கோரிக்கையை ஏற்று வீடுகள் எதுவும் இடிக்கப்படாது தஞ்சை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அறிவுடைநம்பி உறுதி
x
தினத்தந்தி 1 April 2021 10:06 AM IST (Updated: 1 April 2021 10:06 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மேலஅலங்கம், வடக்கு அலங்கத்தில் மக்களின் கோரிக்கையை ஏற்று வீடுகள் எதுவும் இடிக்கப்படாது என தஞ்சை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அறிவுடைநம்பி உறுதி அளித்தார்.

தஞ்சாவூர்,

தஞ்சை சட்டசபை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அறிவுடைநம்பி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று அவர், தஞ்சை நகரில் பல்வேறு பகுதிகளில் தீவிர பிரசாரம் செய்து இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்குசேகரித்தார். பிரசாரத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் அறிவுடைநம்பி பேசியதாவது:-

அ.தி.மு.க. ஆட்சியில் தான் தஞ்சை தொகுதி வளர்ச்சி பெற்றுள்ளது. தற்போது ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. காமராஜர் காய்கறி வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது. சரபோஜி மார்க்கெட் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. மக்களின் கோரிக்கையை ஏற்று தஞ்சை மேலஅலங்கம், வடக்குஅலங்கத்தில் கோட்டைச்சுவரில் உள்ள வீடுகள் எதுவும் இடிக்கப்படாது.

அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ், ஏழை மணமக்களுக்கு அழகிய பட்டாடை, வெள்ளிக் கொலுசு, வீட்டு உபயோக பொருட்கள் உள்பட அம்மா சீர்வரிசை பரிசு வழங்கப்படும். திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ், தாலிக்கு வழங்கப்பட்டு வரும் தங்கத்தோடு, பட்டதாரி பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் ரூ.50 ஆயிரம், ரூ.60 ஆயிரமாகவும், பட்டதாரி அல்லாத பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் ரூ.25 ஆயிரம் ரூ.35 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோசை தஞ்சை சட்டசபை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அறிவுடைநம்பி நேரில் சந்தித்து ஆதரவு கேட்டு வாழ்த்து பெற்றார். வேட்பாளருடன் காவேரி சிறப்பு அங்காடி தலைவர் பண்டரிநாதன், மாநகராட்சி முன்னாள் மேயர் சாவித்திரிகோபால், முன்னாள் துணை மேயர் மணிகண்டன், சிறுபான்மையினர் பிரிவு மாவட்ட துணைச் செயலாளர் சகாயராஜ், அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் நாகராஜன் மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் சென்றனர்.

தமிழ்நாடு பிராமணர் சங்க மாநில தலைவர் ஹரிஹரமுத்து அய்யர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டினை பொறுத்தவரை ஆன்மீக வளர்ச்சியும், இறைநம்பிக்கையும் தழைத்தோங்க பணியாற்றியதோடு தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும், சமூகநலத்திற்கும் எடுத்துக்கட்டாக இருந்து தமிழகம் பல்வேறு வழியில் முன்னேறுவதற்கு உறுதுணையாக இருந்த ஒரு சமூகமாக பிராமணர் சமூகம் உள்ளது.

இருப்பினும் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக நம் பிராமண சமூகம் பல்வேறு வழியில் குறிப்பாக சமூக பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்டும், நசுக்கப்பட்டும், கேலிப்பேச்சுக்கும், ஏச்சுக்கும் ஆளாகி துயரப்படுவதற்கு முக்கிய காரணியாக இருக்கும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு எதிராக வாக்களிக்கவும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீதம் ஒதுக்கீடு வழங்கிய பா.ஜ.க. கட்சி இடம் பெற்றுள்ள அ.தி.மு.க. தலைமையில் தேர்தலை சந்திக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தமிழ்நாடு பிராமணர் சங்கம் தங்களது முழு ஆதரவை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வருகின்ற சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளருக்கு தமிழகத்தில் வாழும் அனைத்து பிராமண சமூகத்தினரும் தவறாமல் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story