தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் இளைஞர்கள் சுயஉதவி குழுக்கள் அமைக்கப்படும் பெரியகுளத்தில், கனிமொழி எம்.பி. பேச்சு
தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் இளைஞர்கள் சுயஉதவி குழுக்கள் அமைக்கப்படும் என்று பெரியகுளம் பிரசாரத்தின்போது கனிமொழி எம்.பி.பேசினார்.
தேனி:
தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. தேனி மாவட்டத்தில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து நேற்று தேர்தல் பிரசாரம் செய்தார். பெரியகுளம் காந்தி சிலை முன்பு, பெரியகுளம் (தனி) தொகுதி வேட்பாளர் சரவணக்குமார் எம்.எல்.ஏ.வை ஆதரித்து அவர் பேசியதாவது:-
கடந்த 10 ஆண்டுகளாக ஒரு ஆட்சி நடக்கிறது. வெற்றிநடை போடுகிறது என்று விளம்பரம் போடுகிறார்கள். யாருக்காவது அப்படி வெற்றி நடைபோடுவது தெரியுமா? உங்கள் வீட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு வேலை கிடைக்கிறதா? தமிழகம் முழுவதும் படித்து முடித்து விட்டு 23 லட்சம் இளைஞர்கள், இளம்பெண்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். எதை எடுத்தாலும் பிரச்சினைகள், போராட்டங்கள் என்று ஒவ்வொரு நாளும் போராட்டங்களை சந்தித்து கொண்டு இருக்கும் நிலையை நாம் பார்க்கிறோம்.
இந்த ஊரை சேர்ந்தவர் துணை முதல்-அமைச்சராக இருக்கிறார். அவர் நினைத்தால் உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் செய்து தர முடியும். ஏதாவது செய்து இருக்கிறாரா?. ஒன்றே ஒன்றை செய்தார். லட்சுமிபுரத்தில் ஆழமான கிணறு வெட்டி அதில் தண்ணீர் எடுத்து விற்று காசாக்கி கொண்டார்.
இளைஞர்கள் சுயஉதவி குழுக்கள்
ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்று தர்மயுத்தம் நடத்தினார். அவரை அழைத்து துணை முதல்-அமைச்சர் பதவி கொடுத்தவுடன் ஜெயலலிதாவை மறந்து விட்டார்.
ஜெயலலிதாவையே மறந்தவர் மக்களையா நினைத்து பார்க்கப் போகிறார்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் விவசாய கடன் முழுமையாக ரத்து செய்யப்படும். சுயஉதவிக்குழுக்களுக்கு இந்த ஆட்சியில் மானியம், சுழல் நிதி கொடுப்பது இல்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் முன்பு வழங்கப்பட்டது போல் சுழல்நிதி, மானியம் வழங்கப்படும். தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் மகளிர் சுயஉதவி குழுவை போன்று, இளைஞர்கள் சுயஉதவி குழுக்கள் அமைக்கப்படும். இளைஞர்கள் தொழில் தொடங்க வேண்டும், வியாபாரம் செய்ய வேண்டும் என்றால் அவர்களுக்கு கடன் மற்றும் மானியம் வழங்கப்படும்.
தமிழக அரசு துறைகளில் 3 லட்சத்து 50 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளன. அவை அனைத்தும் தமிழகத்தில் உள்ள இளைஞர்கள், இளம்பெண்களை கொண்டு நிரப்பப்படும். மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.
இவ்வாறு அவர் பேசினார். அப்போது வேட்பாளர் சரவணக்குமார் எம்.எல்.ஏ. உடன் இருந்தார்.
பின்னர் கனிமொழி எம்.பி., கம்பம் தொகுதி வேட்பாளர் என்.ராமகிருஷ்ணனை ஆதரித்து உத்தமபாளையத்திலும், போடி தொகுதி வேட்பாளர் தங்கதமிழ்செல்வனை ஆதரித்து பழனிசெட்டிபட்டியிலும், ஆண்டிப்பட்டி தொகுதி வேட்பாளர் மகாராஜனை ஆதரித்து ஆண்டிப்பட்டியிலும் பிரசாரம் செய்தார்.
Related Tags :
Next Story