பந்தலூர் அருகே நகராட்சி குப்பை கிடங்கில் தீ


பந்தலூர் அருகே நகராட்சி குப்பை கிடங்கில் தீ
x
தினத்தந்தி 1 April 2021 8:16 PM IST (Updated: 2 April 2021 12:30 AM IST)
t-max-icont-min-icon

பந்தலூர் அருகே நகராட்சி குப்பை கிடங்கில் தீப்பிடித்தது.

பந்தலூர்,

நெல்லியாளம் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு, பந்தலூர் அருகே ஏலமன்னாவில் உள்ளது. இந்த கிடங்கில் பந்தலூர், உப்பட்டி, தேவாலா, நாடுகாணி, மரப்பாலம், இரும்புபாலம் உள்ளிட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொண்டு வரப்படுகிறது.

 பின்னர் மக்கும் குப்பை அல்லது மக்காத குப்பை என தரம் பிரிக்கப்படுகிறது. தொடர்ந்து அதை பயன்படுத்தி இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று அந்த குப்பை கிடங்குக்கு அருகில் உள்ள வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது. அதிலிருந்து பறந்து வந்த தீப்பொறி குப்பை கிடங்கில் விழுந்தது. இதனால் அங்கிருந்த குப்பைகளில் தீப்பிடித்தது.

மேலும் காற்றும் வீசியதால், குப்பை கிடங்கில் தீ மள மளவென பரவியது. இதனால் அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. இதுகுறித்து நெல்லியாளம் நகராட்சி நிர்வாகத்துக்கு, பணியாளர்கள் தகவல் கொடுத்தனர். 

அதன்பேரில் நகராட்சி ஆணையாளர் லீனாசைமன், பொறியாளர் சிவகுமார், சுகாதார ஆய்வாளர் பாலகுமார் மற்றும் அதிகாரிகள் உடனடியாக நேரில் வந்து பார்வையிட்டனர்.

பின்னர் கூடலூரில் இருந்து தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் தண்ணீரை பீய்ச்சிடியத்து தீயை அணைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது.

Next Story