நாட்டறம் பள்ளி அருகே வாக்காளர் பட்டியலில் ஊர் பெயர் மாயம், பொதுமக்கள் தர்ணா; தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவிப்பு
நாட்டறம்பள்ளி அருகே வாக்காளர் பட்டியலில் கிராமத்தின் பெயர் மாயமானதால் பொது மக்கள் கறுப்பு கொடி ஏந்தி சாலைமறியல் ஈடுபட்டனர். தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் கூறினர்.
ஜோலார்பேட்டை
கிராமத்தின் பெயர் மாற்றம்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி தாலுகா கொண்டகிந்தனப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட மல்லரிப்பட்டி கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். வாக்காளர் பட்டியலில் இதுவரை மல்லரிப்பட்டி கிராமப்பெயருடன் சுமார் 400-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் பெயர் இடம்பெற்றிருந்தது.
இந்தநிலையில் திருத்தப்பட்ட புதிய வாக்காளர் பட்டியலில் மல்லரிப்பட்டி கிராமத்தின் பெயர் இல்லை. இந்த கிராத்தின் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்த வாக்காளர்களின் பெயர்கள் அருகில் உள்ள ஆத்துமேடு, சாமகவுண்டனூர், பலராமன் வட்டம், பேத்தன்குட்டை பகுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
சாலை மறியல்
இதனை கண்ட கிராம மக்கள் நேற்று காலை அனைவரது ஆதார், ரேசன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை சாலையில் குவியலாக குவித்து தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஏற்றினர். பின்னர் மல்லரிப்பட்டி சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இது குறித்து தகவலறிந்ததும் நாட்டறம்பள்ளி தாசில்தார் சுமதி தலைமையில் வருவாய் துறையினர் மற்றும் நாட்டறம்பள்ளி போலிசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று சாலைமறியல் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொது மக்கள் தங்களது ஊர் பெயர் வாக்காளர் பட்டியலில் வந்தால் மட்டுமே நாங்கள் ஓட்டு போடுவோம், இல்லையென்றால் நாங்கள் அனைவரும் தேர்தலை புறகணிப்போம் என கூறினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story