மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி கலெக்டர் கார்த்திகா நேரில் ஆய்வு


மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி கலெக்டர் கார்த்திகா நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 1 April 2021 6:07 PM GMT (Updated: 1 April 2021 6:08 PM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் 5 சட்டசபை தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணியை கலெக்டர் கார்த்திகா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, அரூர் (தனி), பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய 5 சட்டசபை தொகுதிகளில் வருகிற 6-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதிகளில் அ.தி.மு.க., தி.மு.க., மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க., தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 76 பேர் போட்டியிடுகிறார்கள். இந்த 5 சட்டசபை தொகுதிகளில் மொத்தம் 12 லட்சத்து 67ஆயிரத்து  798 வாக்காளர்கள் உள்ளனர். 5 தொகுதிகளில் வாக்குப்பதிவுக்காக மொத்தம் 1,817 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 420 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் 12,810 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகிறார்கள்.
சின்னங்கள் பொருத்தும் பணி
இந்த நிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் புகைப்படத்துடன் கூடிய வேட்பாளர் பெயர், அவர்களது சின்னம் ஆகிவை பொருத்தும் பணி நடைபெற்றது. தர்மபுரி, அரூர் உதவி கலெக்டர் அலுவலகங்கள், பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய தாலுகா அலுவலகங்கள் ஆகியவற்றில் இந்த பணி நடைபெற்றது. சின்னங்கள் பொருத்தும் பணியை கலெக்டர் கார்த்திகா, தர்மபுரி உதவி கலெக்டர் பிரதாப் மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதுதொடர்பாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் இருந்து 5 சட்டசபை தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த 5 தொகுதிகளில் மொத்தம் 2,183 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இவற்றில் புகைப்படத்துடன் வேட்பாளர்களின் பெயர், சின்னங்கள் பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

Next Story