வேலாயுதம்பாளையத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா தேர்தல் பிரசாரம்


வேலாயுதம்பாளையத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா தேர்தல் பிரசாரம்
x
தினத்தந்தி 2 April 2021 12:42 AM IST (Updated: 2 April 2021 12:42 AM IST)
t-max-icont-min-icon

வேலாயுதம்பாளையத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது, தமிழ்நாட்டில் வளர்ச்சியை அ.தி.மு.க., பா.ஜ.க. தான் செய்து தர முடியும் என்று கூறினார்.

வேலாயுதம்பாளையம்
வரவேற்பு
அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர், மத்திய மந்திரிகள் மற்றும் பா.ஜ.க. தேசிய தலைவர் உள்ளிட்டோர் தமிழகத்தில் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். இதன் ஒருபகுதியாக நேற்று மாலை கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் கே.அண்ணாமலையை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரிப்பதற்காக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வேலாயுதம்பாளையம் வந்தார்.இதற்காக திருக்கோவிலூரில் இருந்து நேற்று மாலை 5 மணிக்கு தனி ஹெலிகாப்டர் மூலமாக தளவாப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரி விளையாட்டு திடலில் வந்திறங்கினார். அவருக்கு பா.ஜனதாவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். 
திறந்தவேன் மூலம் வாக்கு சேகரிப்பு
பின்னர் அவர் தளவாப்பாளையத்தில் இருந்து வேலாயுதம்பாளையம் ரவுண்டானாவிற்கு கார் மூலம் வந்தார். அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் அவரை பார்த்து வாழ்த்து கோஷங்கள் எழுப்பியும், மேளதாளங்கள் முழங்கவும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அந்த வரவேற்பை ஏற்றுக்கொண்ட அமித்ஷா திறந்த வேனில் ஏறி பிரசாரம் செய்தார். அப்போது அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் கே.அண்ணாமலையை ஆதரித்து வாக்குகள் சேகரித்தார். 
வாழ்த்து கோஷம்
அமித்ஷாவின் வாகனத்துக்கு முன்பாக அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து கோஷங்களை எழுப்பியபடி முன்பு சென்றனர். அவர்கள் தங்களது கைகளில் அமித்ஷாவை வரவேற்று எழுதப்பட்ட பதாகைகள் மற்றும் தாமரை சின்னத்தை கைகளில் பிடித்திருந்தனர். வழிநெடுகிலும் பா.ஜனதா தொண்டர்கள் மலர் தூவி வரவேற்றனர். அப்போது வெற்றிச்சின்னமான இரட்டை விரலை காண்பித்தும், கே.அண்ணாமலையின் கரத்தை உயர்த்திப் பிடித்தும் தாமரை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தபடி அமித்ஷா பிரசார வாகனத்தில் வந்தார். 
அமித்ஷா பேச்சு
பின்னர் அவர் பிரசார வாகனத்தில் நின்றவாறு பொதுமக்கள் முன்னிலையில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
உண்மையான காவல்துறை அதிகாரி அண்ணாமலை ஆவார். தமிழ்நாட்டில் காங்கிரஸ், தி.மு.க. ஊழல் செய்த கட்சிகள். ஊழலே செய்யாத கட்சி பா.ஜ.க. தான். தமிழ்நாட்டில் அ.தி.மு.க., பா.ம.க. பா.ஜ.க. கூட்டணி தான் வெற்றி பெற வேண்டும். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரால் தான் தமிழ்நாடே வளர்ச்சி பெற்றுள்ளது. உதயநிதிக்கு ஒரே ஆசை முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலினை உருவாக்க வேண்டும் என்பது தான். தமிழ்நாட்டின் வளர்ச்சி வேண்டுமா? உதயநிதியின் ஆசை வேண்டுமா?. தமிழ்நாட்டில் வளர்ச்சியை அ.தி.மு.க., பா.ஜ.க. தான் செய்து தர முடியும். வேற யாராலும் செய்து தர முடியாது. மோசடிக்காரர்களுக்கு வாக்கு அளிக்காதீர்கள். வாக்கு அளிக்கும்போது, தாமரை பட்டனை அழுத்துங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
அமித்ஷாவுடன் தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்பட கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர். கரூர் மாவட்டத்துக்கு உள்துறை மந்திரி அமித்ஷா வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. 

Next Story