தென்கரை வாய்க்காலில் கூடுதலாக தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை


தென்கரை வாய்க்காலில் கூடுதலாக தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 2 April 2021 1:10 AM IST (Updated: 2 April 2021 1:10 AM IST)
t-max-icont-min-icon

தென்கரை வாய்க்காலில் கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குளித்தலை
அதிகாரிகளை சந்திக்க வந்த விவசாயிகள்
திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை மற்றும் கரூர் மாவட்டம் நங்கவரம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் பலர் நேற்று குளித்தலை பெரியபாலத்தில் உள்ள ஆற்றுபாதுகாப்பு உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திற்கு வாய்க்காலில் கூடுதலாக தண்ணீர் திறக்ககோரி அதிகாரிகளை சந்திக்க வந்திருந்தனர். இது குறித்து அவர்கள் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர்கள் கூறுகையில், கரூர் மாவட்டம் மாயனூர் தடுப்பணையிலிருந்து பிரிந்து செல்லும் வாய்க்கால்களில் ஒன்றான தென்கரை வாய்க்கால் லாலாபேட்டை, குளித்தலை வழியாக திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை வரை சென்று அங்கு காட்டுவாரியுடன் இணைகிறது. அங்கு தண்ணீர் தேக்கப்பட்டு அங்கிருந்து அய்யன் வாய்க்கால் மூலம் பெட்டவாய்த்தலை, சிறுகமணி, பெருகமணி, எஸ்.புதுக்கோட்டை போன்ற பகுதி வழியாகவும், நங்கம் வாய்க்கால் மூலம் பொய்யாமணி, நங்கவரம் பகுதிக்கும் பிரிந்து செல்கின்றது.
பெரிதும் பாதிப்பு
 இந்த நிலையில் குளித்தலை வழியாக வரும் தென்கரை வாய்க்காலில் குறைந்த அளவிலான தண்ணீரே வருவதால் அய்யன், நங்கம் வாய்க்காலுக்கு தேக்கி விடுவதற்கு போதுமான தண்ணீர் வரத்து இல்லை. இதனால் அய்யன் வாய்க்கால் மூலம் பாசனம் பெறும் சுமார் 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலும், நங்கம் வாய்க்கால் மூலம் 2 ஆயிரத்து 600 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள வாழை, கரும்பு, கோரை, வெற்றிலை போன்ற பயிர்கள் காய்ந்து வருகின்றது.  தற்போது வாழை தார் ஈன்ற நிலையில் உள்ளது.
வாய்க்காலில் தண்ணீர் இல்லாத காரணத்தினால் வாழை தார்கள் பெருக்கம் அதிகரிக்காத நிலையில் வீணாகி வருகின்றது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றோம். எனவே தென்கரை வாய்க்காலில் தண்ணீரை கூடுதலாக திறந்து விட அதிகாரிகளிடம் தெரிவிக்க வந்தோம். மேலும் மேட்டூர் அணையில் 25 அடி உயரத்தில் தண்ணீர் இருந்த காலத்திலேயே 3 ஆயிரம் கனஅடிநீர் ஆற்றில் திறக்கப்பட்டது. தற்போது அணையில் 99 அடி உயரத்தில் தண்ணீர் இருந்தும் திறக்கப்படாமலேயே இருப்பது வேதனை அளிக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
கூடுதலாக தண்ணீ்ர்
 இதையடுத்து விவசாயிகளிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பொதுப்பணித்துறை அதிகாரிகள் குறைந்த கால அளவில் வாய்க்காலில் கூடுதலாக தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளனர். இதை ஏற்றுக்கொண்ட பெட்டவாய்த்தலை, நங்கவரம் பகுதி விவசாயிகள் பின்னர் அங்கிருந்து சென்றனர்.





Next Story