புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை


புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 2 April 2021 1:47 AM IST (Updated: 2 April 2021 1:47 AM IST)
t-max-icont-min-icon

திருமணமாகி 45 நாட்களே ஆன நிலையில் புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

பெரம்பலூர்:

புதுப்பெண்
பெரம்பலூர் மாவட்டம் சத்திரமனை கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம். இவருடைய மனைவி ராஜம்மாள். இவர்களுக்கு ரஞ்சிதா, செண்பகம் (வயது 20) என 2 மகள்கள். இதில் மூத்த மகள் ரஞ்சிதா திருமணமாகி செட்டிகுளத்தில் கணவருடன் வசித்து வருகிறார். 2-வது மகள் செண்பகத்துக்கும், வேப்பந்தட்டை தாலுகா எறையூர் கிராமத்தை சேர்ந்த கண்ணன் மகன் மணிவேல் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 15-ந்தேதி திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் திருமணம் நடந்தது.
இதைத்தொடர்ந்து புதுமண தம்பதியான செண்பகம்-மணிவேல் சென்னையில் வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 28-ந்தேதி சுந்தரம் சென்னைக்கு சென்று, செண்பகத்தை வீட்டுக்கு அழைத்து வந்தார்.
மண்எண்ணெய் ஊற்றி...
நேற்று காலை சுந்தரம் கூலி வேலைக்கு சென்று விட்டார். ராஜம்மாள் வெளியே தண்ணீர் பிடிக்க சென்று விட்டார். அப்போது வீட்டில் தனியாக இருந்த செண்பகம் தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். தீ உடல் முழுவதும் பரவியதால் வலியால் அலறி துடித்த செண்பகம், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று செண்பகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த புகாரின்பேரில், பெரம்பலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சின்னசாமி வழக்குப்பதிவு செய்து, செண்பகம் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 45 நாட்களே ஆன நிலையில் செண்பகம் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் சப்-கலெக்டரும் விசாரணை நடத்த உள்ளார்.

Next Story