வேளிமலை குமாரசாமி கோவிலில் திருக்கல்யாண விழா


வேளிமலை குமாரசாமி கோவிலில்  திருக்கல்யாண விழா
x
தினத்தந்தி 1 April 2021 8:38 PM GMT (Updated: 1 April 2021 8:38 PM GMT)

தக்கலை அருகே வேளிமலை குமாரசாமி கோவிலில் திருக்கல்யாண விழா நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பத்மநாபபுரம்:
தக்கலை அருகே வேளிமலை குமாரசாமி கோவிலில் திருக்கல்யாண விழா நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
குறவர் படுகளம்
தக்கலை அருகே குமாரகோவில் வேளிமலை குமாரசாமி கோவிலில் முருகப்பெருமான்- வள்ளி திருக்கல்யாண விழா ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக திருக்கல்யாண நிகழ்ச்சி எளிமையாக நடந்தது. 
இந்த ஆண்டு திருக்கல்யாண விழா நேற்று முன்தினம் தொடங்கியது. விழாவில் கணபதி ஹோமம், முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், திருவிளக்கு பூஜை, காப்பு கட்டும் நிகழ்ச்சி போன்றவை நடந்தது.
விழாவில் நேற்று திருக்கல்யாணம் நடந்தது. இதற்காக காலையில் சுவாமி வள்ளிக்குகை அருகில் உள்ள கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருளினார்.
மதியம் சுவாமி, வள்ளி நாயகியுடன் மலையில் இருந்து பூப்பல்லக்கில் எழுந்தருளும் போது குறவர் படுகளம் நடந்தது. குறவர் படுகளம் இறுதியில் முருகப்பெருமானிடம் குறவர்கள் சரணடைந்தனர். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
திருக்கல்யாண முகூர்த்தம்
தொடர்ந்து இரவு 7 மணி முதல் 9 மணிக்குள் முருகப் பெருமானுக்கும், வள்ளி நாயகிக்கும் திருக்கல்யாண முகூர்த்தம் நடந்தது. முன்னதாக திருக்கல்யாணத்துக்குரிய தாலி, பட்டு உள்ளிட்ட சீர்பொருட்கள் நார் பெட்டியில் வைத்து தேர் வீதியில் ஊர் அழைப்பு செய்யப்பட்டது. இது முடிந்ததும் சுவாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டது. அத்துடன் மூலஸ்தானத்தில் முருகப்பெருமானுக்கும், வள்ளிதேவிக்கும் திருக்கல்யாணத்தை கோவில் மேல்சாந்தி மாங்கல்யத்தை மாற்றி நடத்தி வைத்தார். இதையடுத்து கோவில் ஊஞ்சல் மண்டபத்தில் வைத்து ஆறுமுக நயினாருக்கும், வள்ளிதேவிக்கும் திருமணம் நடந்தது.
தொடர்ந்து பக்தர்களுக்கு தேன், தினைமாவு, அமிர்தம், லட்டு, மாங்கல்யம் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது. பின்னர், சாமி வெள்ளிக்குதிரையிலும், அம்மன் பூப்பல்லக்கு வாகனத்தில் எழுந்தருளினர். விழாவில் கோவில் மேலாளர் மோகனகுமார், திருவிழா குழு உறுப்பினர்கள் உள்பட பக்தர்கள் கலந்து கொண்டனர். 
விழா தொடர்ந்து 6-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை நடக்கிறது. 6-ந் தேதி மாலை 5 மணிக்கு மயில், கிளி வாகனத்தில் சாமி, அம்பாள், ஆறாட்டுக்கு புறப்படும் நிகழ்ச்சி நடக்கிறது.

Next Story