ஏழைப்பெண்களுக்கு திருமண சீர்வரிசை கிடைக்க அ.தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள் தஞ்சை தொகுதி வேட்பாளர் அறிவுடைநம்பி பிரசாரம்


ஏழைப்பெண்களுக்கு திருமண சீர்வரிசை கிடைக்க அ.தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள் தஞ்சை தொகுதி வேட்பாளர் அறிவுடைநம்பி பிரசாரம்
x
தினத்தந்தி 2 April 2021 5:34 AM IST (Updated: 2 April 2021 5:34 AM IST)
t-max-icont-min-icon

ஏழைப்பெண்களுக்கு திருமண சீர்வரிசை கிடைக்க அ.தி.மு.க. வுக்கு வாக்களிக்குமாறு தஞ்சை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அறிவுடைநம்பி பிரசாரம் செய்தார்.

தஞ்சாவூர், 

தஞ்சை சட்டசபை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக அறிவுடைநம்பி போட்டியிடுகிறார். அவர் தஞ்சை ஒன்றிய பகுதி, வல்லம் பேரூராட்சி, தஞ்சை மாநகராட்சி பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நேற்று அவர் தஞ்சை மாநகரில் முக்கிய பிரமுகர்களை சந்தித்தும், கடைவீதி பகுதியில் திறந்த ஜீப்பில் சென்றும் வாக்கு சேகரித்தார். தஞ்சை துளசியாபுரத்தில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட தலைவர் வாசன் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளையும் சந்தித்து அறிவுடைநம்பி வாக்கு சேகரித்தார். பின்னர் அவர் கூறியதாவது:- 

அ.தி.மு.க. ஆட்சியில் தான் தஞ்சை மாவட்டம் வளர்ச்சி  அடைந்தது. அதே போன்று மேலும் தஞ்சை வளர்ச்சி அடைய  வேண்டுமானால் அ.தி.மு.க.வை ஆதரியுங்கள். தஞ்சை  தொகுதி மக்களின் பிரச்சினைகளை நான்  உடனுக்குடன் நிவர்த்தி செய்து தருவேன். மக்கள்  குறைகளை தீர்க்க வாட்ஸ்-அப் மூலம் குழு ஏற்படுத்தி  உடனுக்குடன் நிவர்த்தி செய்து தருவேன்.

நகர பஸ்களில் பயணம் செய்யும் மகளிருக்கு பஸ்  கட்டணத்தில் 50 சதவீதம் கட்டண சலுகை  வழங்கப்படும். பொது வினியோகத் திட்டத்தின் மூலம்  அத்தியாவசிய ரேஷன் பொருட்கள் அனைத்தும்  மக்களின் வீடுகளுக்கே நேரிடையாக சென்று  வழங்கப்படும்.விவசாயிகளின் உற்பத்தியை  பெருக்கவும், அதற்கு விவசாயிகளை ஊக்குவிக்கும்  வகையிலும் அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.7,500 உழவு  மானியம் வழங்கப்படும். மாணவர் மற்றும் பெற்றோர்  நலன் காக்க கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும்.  கல்லூரி மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 2  ஜி.பி. டேட்டா ஆண்டு முழுவதும் வழங்கப்படும். அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்கு இரண்டு சக்கர வாகனங்கள் வாங்க மானியம் வழங்கப்படும்

யு.பி.எஸ்.சி., நீட், ஐ.ஐ.டி.. ஜெ.இ.இ., டி.என்.பி.எஸ்.சி. போன்ற  போட்டித்தேர்வுகளில் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை  மாணவர்கள் வெற்றி பெறுவதை ஊக்குவிக்கும்  வகையில், உயர்தர பயிற்சி மையம் ஒவ்வொரு  மாவட்டத்திலும் அமைக்கப்படும். அரசு பணிகளில்  இடம் பெறாத குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி உறுதியாக வழங்கப்படும். சமூக ஓய்வூதிய திட்டத்தின் கீழ், ஆண் வாரிசால்  புறக்கணிக்கப்பட்ட முதியோருக்கும் முதியோர்  உதவித்தொகை வழங்கப்படும். மேலும், முதியோர்,  விதவைப்பெண்கள், முதிர்கன்னிகள், கணவரால்  கைவிடப்பட்ட பெண்கள், மூன்றாம்  பாலினத்தவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சமூக  பாதுகாப்பு ஓய்வூதியம் ரூ.1,000த்தில் இருந்து ரூ.2  ஆயிரமாக இருமடங்காக உயர்த்தி  வழங்கப்படும்.திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ்,  ஏழை மணமக்களுக்கு அழகிய பட்டாடை, வெள்ளிக்  கொலுசு, வீட்டு உபயோக பொருட்கள் உள்பட அம்மா  சீர்வரிசை பரிசு வழங்கப்படும்.
 
திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ், தாலிக்கு வழங்கப்பட்டு வரும் தங்கத்தோடு, பட்டதாரி பெண்களுக்கு வழங்கப்பட்டு  வரும் ரூ.50 ஆயிரம், ரூ.60 ஆயிரமாகவும், பட்டதாரி  அல்லாத பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் ரூ.25  ஆயிரம் ரூ.35 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்படும். அனைத்து அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கும்  விலையில்லா கேபிள் இணைப்பு வழங்கப்படும். இவ்வாறு  அவர் கூறினார். வேட்பாளருடன் தஞ்சை மாவட்ட எம்.ஜி.ஆர்.  இளைஞரணி செயலாளர்  ஜெயப்பிரகாஷ்நாராயணன், மருத்துவக்கல்லூரி  பகுதி செயலாளர்  வக்கீல் சரவணன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள்  உடன் சென்றனர்.

Next Story