பூண்டி ஏரியில் குறைந்து வரும் நீர்மட்டம்
பூண்டி ஏரியின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
ஊத்துக்கோட்டை,
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி. இந்த ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம் மற்றும் சோழவரம் ஏரிகளுக்கு திறந்து விடுவது வழக்கம்.
இந்த நிலையில் நிவர் மற்றும் புரவி புயல் காரணமாக பலத்த மழை பெய்ததையடுத்து கடந்த ஜனவரி மாதத்தில் பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பியது. இதை கருத்தில் கொண்டு கடந்த செப்டம்பர் மாதம் 20-ந்தேதி முதல் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தொடர்ந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் பிப்ரவரி மாதம் 6-ந் தேதி நிறுத்தப்பட்டது.
செப்டம்பர் மாதம் 21-ந்தேதி முதல் பிப்ரவரி மாதம் 6-ந்தேதி வரை சாதனை அளவில் 8.060 டி.எம்.சி. தண்ணீர் பூண்டி ஏரியை வந்தடைந்தது. இதனிடையே பலத்த மழைக்கு அதிக தண்ணீர் வரத்தால் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டில் இருந்து பூண்டி ஏரி வரை 25 கிலோமீட்டர் தூரத்துக்கு கிருஷ்ணா கால்வாய் பல இடங்களில் சேதம் அடைந்தது. சேதம் அடைந்த கால்வாய் ரூ.24 கோடி செலவில் சீரமைக்கப்பட்டு பணிகள் தற்போது வேகமாக நடந்து வருகின்றன.
31.15 அடியாக பதிவானது
இந்த நிலையில் பூண்டி ஏரியில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். பிப்ரவரி மாத இறுதியில் நீர் மட்டம் 35 அடியாக பதிவாகி 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு இருந்தது. முன்பு இல்லாத வகையில் பிப்ரவரி மாத இறுதி முதல் கடும் வெயில் வாட்டி வருதல், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படுவதால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. நேற்று காலை நீர்மட்டம் 31.15 அடியாக பதிவானது. 2 ஆயிரத்து 187 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.
பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு வினாடிக்கு 200 கனஅடி, செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 183 கனஅடி, சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 9 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. அடுத்த மாதம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு மீண்டும் தண்ணீர் திறக்க உள்ளதாக ஆந்திர பொதுப்பணிதுறை அதிகாரிகள் அறிவித்து இருப்பது ஆறுதல் தரும் தகவலாகும்.
Related Tags :
Next Story