தி.மு.க. ஆட்சி அமைந்தால் ஒட்டன்சத்திரம் முன்மாதிரி தொகுதியாக மாறும் அர.சக்கரபாணி உறுதி
பிரசாரத்தின்போது தொகுதி மக்களின் நலன் சார்ந்த திட்டங்களை அறிவித்தும், தொகுதிக்கு செய்துள்ள வளர்ச்சி பணிகள் குறித்தும் பேசி மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார்.
ஒட்டன்சத்திரம்,
ஒட்டன்சத்திரம் தொகுதி தி.மு.க. வேட்பாளராக தற்போதைய எம்.எல்.ஏ.வும், தி.மு.க. கொறடாவுமான அர.சக்கரபாணி போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு, வீடாக சென்று பிரசாரம் செய்து வருகிறார். இந்த பிரசாரத்தின்போது தொகுதி மக்களின் நலன் சார்ந்த திட்டங்களை அறிவித்தும், தொகுதிக்கு செய்துள்ள வளர்ச்சி பணிகள் குறித்தும் பேசி மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார். நேற்று அவர் தொகுதிக்கு உட்பட்ட ஒட்டன்சத்திரம் நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிக்கு சென்று ஓட்டு வேட்டையில் ஈடுபட்டார். அப்போது அவர் மக்களிடையே பேசியதாவது:-
கடந்த 10 ஆண்டுகாலத்தில் தி.மு.க. ஆட்சியில் இல்லாவிட்டாலும் நமது தொகுதிக்கான அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி உள்ளேன். மேலும் தொகுதிக்கான வளர்ச்சி திட்டங்கள் பற்றியும் சட்டமன்றத்தில் அவ்வப்போது குரல் கொடுத்து அவற்றை கேட்டு பெற்றுள்ளேன். அதுபோல சில திட்டங்கள் கிடப்பில் உள்ளன. நான் மீண்டும் வெற்றிபெற்று அந்த திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றி தமிழகத்திலேயே ஒட்டன்சத்திரத்தை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன்.
அதேபோல் தி.மு.க. அறிவித்துள்ள திட்டங்கள் அனைத்தும் மாநிலத்தின் வளர்ச்சிக்கானதாக உள்ளது. எனவே தி.மு.க. ஆட்சி அமைந்தால் அந்த திட்டங்கள் நிறைவேற்றப்படுவதன் மூலம் தமிழகம் முன்மாதிரி மாநிலமாக மாறும். மக்களும் அதையே விரும்புகின்றனர். எனவே நீங்கள் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிப்பதன் மூலம் அதை பெற முடியும். இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story