தி.மு.க.வின் தந்திரத்துக்கு சிறுபான்மையின மக்கள் பலியாகி விட வேண்டாம் என்று கோவையில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்


தி.மு.க.வின் தந்திரத்துக்கு சிறுபான்மையின மக்கள் பலியாகி விட வேண்டாம் என்று கோவையில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்
x
தினத்தந்தி 2 April 2021 11:21 AM IST (Updated: 2 April 2021 11:21 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க.வின் தந்திரத்துக்கு சிறுபான்மையின மக்கள் பலியாகி விட வேண்டாம்

கோவை

தி.மு.க.வின் தந்திரத்துக்கு சிறுபான்மையின மக்கள் பலியாகி விட வேண்டாம் என்று கோவையில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்

எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

தமிழகத்தில் வருகிற 6-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும்  சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார். அவர் நேற்று கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டார். அவர் நீலகிரி மாவட்டத்தில் பிரசாரத்தை முடித்துக் கொண்டு மதியம் ஹெலிகாப்டர் மூலம் கோவை விமான நிலையம் வந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இதைத்தொடர்ந்து அவர் மாலை 4.30 மணியளவில் கோவை கொடிசியா மைதானத்திற்கு திறந்தவேனில் நின்றவாறு பிரசாரம் மேற்கொண்டார். அவருடன் திறந்த வேனில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இருந்தார். 


மேடையில் திருப்பூர் மாவட்டம் அவினாசி தொகுதி வேட்பாளர் தனபால், பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன், கவுண்டம்பாளையம் தொகுதி வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார், கோவை வடக்கு தொகுதி வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன், மேட்டுப்பாளையம் தொகுதி வேட்பாளர் ஏ.கே.செல்வராஜ், சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர் கே.ஆர்.ஜெயராம், சூலூர் தொகுதி வேட்பாளர் வி.பி.கந்தசாமி, கிணத்துக்கடவு தொகுதி வேட்பாளர் செ.தாமோதரன், வால்பாறை தொகுதி வேட்பாளர் அமுல்கந்தசாமி மற்றும் கோவை தெற்கு தொகுதியில் கூட்டணி கட்சியான பா.ஜனதா வேட்பாளர் வானதி சீனிவாசன் ஆகியோர் இருந்தனர். அவர்களுக்கு ஆதரவு திரட்டி முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது

100-க்கு 100 சதவீதம் வெற்றி

எனது தொண்டை வறண்டு விட்டது. மங்கலாகத்தான் குரல் இருக்கும். பொறுத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றிபெறும் என்ற மாயையில் மு.க.ஸ்டாலின் பகல் கனவு கண்டுகொண்டு இருக்கிறார். கொடியாவில் கோவை மாவட்டமே கூடியிருக்கிறது. அ.தி.மு.க. தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணி வெற்றிக் கூட்டணி. 

ஜெயலலிதா கட்டிக்காத்த கூட்டணி. பிரதமர் அங்கம் வகிக்கும் கூட்டணி. தமிழகம் வளர்ச்சி பெறவேண்டும் என்ற எண்ணத்தில் உருவான கூட்டணி. 
கோவையில் கடந்த தேர்தலில் 100-க்கு 90 சதவீதம் வெற்றி பெற்றோம். ஆனால் இந்த தேர்தலில் 100-க்கு 100 சதவீதம் அ.தி.மு.க. தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணி வெற்றி பெறும்.

முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் லட்சிய கனவை நனைவாக்கி 100 சதவீத வெற்றியை பெற்று அவரது சமாதியில் சமர்ப்பிப்போம்.

 தமிழகத்திலேயே பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி அதிக நன்மைகளை பெற்றது கோவை மாவட்டம். சிறப்பான சாலை வசதி, பாலம் வசதி, குடிநீர் வசதி, பல கல்லூரிகள் கொடுத்து உள்ளோம். இவ்வாறு பல நன்மைகளை அ.தி.மு.க. அரசு செய்துள்ளது.

பெண்களின் பாதுகாப்பு

கோவையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரெயில் ரூ.6 ஆயிரத்து 500 கோடியில் விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து வருகிறோம். விமானநிலையம் விரிவாக்கம் செய்தால் புதிய புதிய தொழில்கள் தமிழகத்துக்கு வரும். 

கோவை மேற்கு புறவழிச்சாலை பணிக்கான நிலம் எடுக்கும் பணி நடக்கிறது. அது முடிந்ததும் செயல்படுத்தப்படும். காந்திபுரம் 2 அடுக்கு மேம்பாலம், டெக்ஸ்டூல் பாலம், ஈச்சனாரி ரெயில்வே பாலம், ஆவாரம்பாளையம் ரெயில்வே பாலம், காரமடை ரெயில்வே பாலம், போத்தனூர் ரெயில்வே பாலம் என பல பாலங்கள் கோவையில் அமைத்து கொடுத்து உள்ளோம்.

நிலைமை இப்படியிருக்க மு.க.ஸ்டாலின் போகிற இடமெல்லாம் பொய் பேசாதீர்கள். ஒன்றுமே செய்யவில்லை என்று கூறுகிறீர்களே இந்த பாலங்களை மறைக்க முடியுமா? மக்கள் சிரிக்கமாட்டார்களா?

 கோவை- அவினாசி சாலையில் 10 கி.மீட்டர் தூரத்துக்கு மேம்பால பணி நடந்து வருகிறது. உக்கடம் ஆத்துப்பாலம், ராமநாதபுரத்தில் மேம்பால பணி, அத்திக்கடவு- அவினாசி திட்டம் ரூ.1,652 கோடியில் நானே அறிவித்து அடிக்கல் நாட்டி உள்ளேன். 2021-ம் ஆண்டில் மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் பணிகள் முடிந்து நானே திறந்துவைப்பேன். 

ஆனைமலை நல்லாறு திட்டம் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் தொடங்கப்படும். பெண்கள் பாதுகாப்பாக வாழ உகந்த நகரம் கோவை நகரம். கோவையில் தொழிற்சாலை நிர்வாகிகளை சந்தித்து அவர்களின் குறைகளை போக்கி நடவடிக்கை எடுத்த அரசு தான் அ.தி.மு.க. 

தென்னை வியாபாரிகளுக்காக மத்திய அரசிடம் கேட்டு கொப்பரை தேங்காய் விலையை ரூ.103 ஆக உயர்த்தி வழங்கப்பட்டு உள்ளது. நீரா பானத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. கோவை மாவட்டத்தில் 68 அம்மா மினிகிளினிக் கொடுத்து உள்ளோம். இந்தியாவிலேயே ஒரே காலக்கட்டத்தில் 2 ஆயிரம் அம்மா மினிகிளினிக் தொடங்கி சாதனை படைத்த அரசு தான் அ.தி.மு.க.

அடிமனதில் உதித்த திட்டம்

நீட் தேர்வை கடந்த 2010-ம் ஆண்டு தி.மு.க. தான் கொண்டு வந்தது. அதை தடுத்து நிறுத்தியது அ.தி.மு.க. ஆனால் கோர்ட்டு உத்தரவினால் அதை அமல்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டோம். அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் உள் ஒதுக்கீடு 7.5 சதவீதம் என்ற திட்டம் என் அடி மனதில் உதித்த திட்டம். அதை நான் அமல்படுத்தினேன். 

இதற்காக யாரும் கோரிக்கை எழுப்பவில்லை. உள் ஒதுக்கீட்டினால் இந்த ஆண்டு 430 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிக்கும் நிலையை ஏற்படுத்தியது தமிழக அரசு. 

அடுத்த ஆண்டு 11 மருத்துவ கல்லூரி வர உள்ளது. இதன் மூலம் கூடுதலாக 1250 இடங்கள் கிடைக்கும். அதில் 7.5 சதவீத ஒதுக்கீட்டின்படி சுமார் 600 ஏழை மாணவர்கள் மருத்துவ படிப்பில் நிலைமை உருவாகும்.

பச்சை பொய் சொல்கிறார்

இவ்வளவு திட்டத்தையும் நான் சொல்லி உள்ளேன். ஆனால் மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க. அரசு ஒன்றுமே செய்யவில்லை என்ற பச்சை பொய்யை சொல்லி வருகிறார். தி.மு.க. ஆட்சியில் இருந்த போது 13 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு நிலுவையில் உள்ளது. அதை மறைப்பதற்காக ஸ்டாலின் எங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டை சொல்லி வருகிறார்.

கவர்னரை சந்தித்து ஸ்டாலின் கொடுத்த ஊழல் புகாரில் என் மீது 600 கோடி ரூபாய் ஊழல் என்று புகார் கூறியிருந்தார். 

ஆனால் அவர் கூறிய ஊழலில் டெண்டரே வைக்கவில்லை. நிதியும் ஒதுக்கவில்லை. சாலை வேலையும் நடக்கவில்லை. பின்னர் எப்படி ஊழல் நடக்கும். யாரோ டைப் செய்து கொடுத்ததை அப்படியே கொண்டு போய் கவர்னரிடம் கொடுத்திருக்கிறார்களே. 

இதே கொடிசியா மைதானத்தில் ஊழல் குற்றச்சாட்டு குறித்து பொது விவாதம் நடத்த தயாரா? நான் ஒரு பக்கம் மைக் பிடிக்கிறேன். நீங்கள் ஒரு பக்கம் மைக் பிடியுங்கள். மக்கள் தீர்ப்புக் கூறட்டும். 

ஆனால் இதற்கு ஸ்டாலின் பதிலே அளிக்கவில்லை. மக்கள் விழிப்புடன் இருக்கிறார்கள்.  விஞ்ஞான உலகத்தில் உங்கள் தில்லு முல்லு எல்லாம் எடுபடாது. எங்கள் மீது எவ்வளவு குற்றச்சாட்டு சொன்னாலும் அவை அனைத்தும் பொய்யான குற்றச்சாட்டு என்று எங்களால் நிரூபிக்க முடியும். கண்ணால் பார்க்க முடியாத காற்றிலேயே 2ஜி ஊழல் செய்தது தி.மு.க. தான். நீங்கள் எங்களை பற்றி ஊழல் என்று பேசி வருகிறீர்கள். 

2ஜி ஊழல் வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வரும்போது யார்- யாரெல்லம் வாய் கொழுப்பில் பேசிக் கொண்டேயிருக்கிறார்களோ அவர்கள் எல்லாம் எங்கே செல்கிறார்கள் என்று தெரியும். ஸ்டாலின் எங்கு சென்றாலும் அவர்கள் ஆட்சி காலத்தில் செய்த சாதனைகளை பற்றி கூறுகிறாரா? என்று பாருங்கள். அவரால் சொல்ல முடியாது. நீங்கள் நல்லதை சொன்னால் ஒரு சில சீட்டுகளாவது மிஞ்சும்.

சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு

இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களுக்கு அ.தி.மு.க. அரசு பல திட்டங்களை செய்துள்ளோம். அதை அவர்கள் எண்ணி பார்க்க வேண்டும். அ.தி.மு.க. அரசு சிறுபான்மை மக்களை பாதுகாக்கும் அரசாக உள்ளது. கண்ணை இமை காப்பது போல சிறுபான்மை மக்களை நாங்கள் பாதுகாத்து வருகிறோம். நான் முதல்- அமைச்சராக பொறுப்பேற்ற தமிழ்நாடு அமைதி பூங்காவாக விளங்குகிறது. உங்கள் வாக்குக்காக தான் தி.மு.க.வினர் உங்களை நாடி வருகிறார்கள். 

சாதாரண குடும்பத்தில் பிறந்து இன்று உங்கள் தயவில் முதல்- அமைச்சராக உள்ளேன். தி.மு.க.வினர் சிறுபான்மை மக்களின் வாக்கு களை பெறுவதற்காக உங்களை குழப்பி தந்திரமாக செயல்படுகிறார்கள். அதற்கு சிறுபான்மை மக்கள் பலியாகி விடக்கூடாது. 

சிறுபான்மை மக்களின் வாக்குகளை பெறுவதற்காக எங்களை தவறாக சித்தரிக்கிறார்கள். தி.மு.க.வினர் திட்டமிட்டு சதி செய்து எங்களை இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களிடமிருந்து பிரிக்க முயற்சி செய்கிறார்கள்.

தமிழகத்தில் 7 ஆயிரம் கோவில்கள் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் சீர் செய்யப்படும். இஸ்லாமிய உலமாக்களுக்கு வீடு வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். அந்த கோரிக்கை நிறைவேற்றப்படும். தி.மு.க. ஒரு அராஜக கட்சி. தி.மு.க.வில் சிலர் தொடர்ந்து பெண்களை இழிவாக, தரக்குறைவாக பேசி வருகிறார்கள். 

அவர்களை கண்டிக்க திராணியில்லாதவர் மு.க.ஸ்டாலின். இத்தகைய தி.மு.க.வுக்கு வருகிற தேர்தலில் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும். பெண்கள் பாதுகாப்பாக வாழ வேண்டுமென்றால் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி அரசு தொடர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story