அ.தி.மு.க ஆட்சி அமைந்ததும் சுரங்கனார் நீர்வீழ்ச்சி பகுதியில் தடுப்பணை கட்டப்படும் வேட்பாளர் ஏ.லோகிராஜன் உறுதி


அ.தி.மு.க ஆட்சி அமைந்ததும் சுரங்கனார் நீர்வீழ்ச்சி பகுதியில் தடுப்பணை கட்டப்படும் வேட்பாளர் ஏ.லோகிராஜன் உறுதி
x
தினத்தந்தி 2 April 2021 5:52 AM GMT (Updated: 2 April 2021 5:52 AM GMT)

தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சி மீண்டும் அமைந்ததும் சுரங்கனார் நீர்வீழ்ச்சி பகுதியில் தடுப்பணை கட்டி விவசாயிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என கூடலூரில் பிரசாரம் செய்தபோது அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.லோகிராஜன் வாக்குறுதி அளித்தார்.

கூடலூர், 

ஆண்டிப்பட்டி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.லோகிராஜன் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அனல்பறக்கும் பிரசாரம் செய்து வருகிறார். நேற்று அவர் கூடலூர் 19-வது வார்டு பிள்ளையார் கோவில் திடலில் இருந்து பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து அரசமர பஸ்நிறுத்தம், நோட்டக்காரன் புளியமரதெரு, பேச்சியம்மன் கோவில்தெரு, அண்ணாநகர், கோட்டை கருப்பசாமி கோவில்தெரு, வடக்குரத வீதி, ஆசாரிதெரு, நடுத்தெரு, காந்திகிராமம், காமாட்சியம்மன் கோவில் தெரு, பொம்மச்சி அம்மன்கோவில் தெரு, கன்னிகாளிபுரம், முத்தையர்தெரு, பழைய பஸ்நிறுத்தம் ஆகிய பகுதிகளில் திறந்தஜீப்பில் நின்றபடி வாக்கு சேகரித்தார். முன்னதாக பிரசாரத்துக்கு வந்த அவருக்கு மக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து அவர் பிரசாரத்தில் திரண்டிருந்த மக்களிடையே அவர் பேசியதாவது:- தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களுக்குமான ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. எனவே எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாரம் மக்களிடையே எடுபடவில்லை. மேலும் நல்லாட்சியை விரும்புவதால் அ.தி.மு.க. ஹாட்ரிக் வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சி அமைக்கும். அதன்பின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் உடனடியாக நிறைவேற்றப்படும். 

குறிப்பாக ஏழைகளுக்கு வீடுகள், ரேஷன் கார்டுதாரர்களுக்கு வாஷிங்மெஷின், ஆண்டுக்கு 6 கியாஸ் சிலிண்டர்கள், அரசு டவுன் பஸ்களில் பெண்களுக்கு இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட வாக்குறுதிகள் உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கூடலூர் பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான நகராட்சி குப்பைக்கிடங்கை ஊருக்கு வெளியே மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். 

மந்தைவாய்க்கால்புலம் பகுதி விவசாயிகளின் பாசன பயன்பாட்டுக்காக சுரங்கனார் நீர்வீழ்ச்சி பகுதியில் புதிதாக தடுப்பணை கட்டி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். பளியன் குடியிருப்பு-கண்ணகி கோவில் இடையே சாலை வசதி செய்யப்படும். இதுபோன்ற எண்ணற்ற நலத்திட்டங்கள் கிடைக்க நீங்கள் செய்ய வேண்டியது இரட்டைஇலை சின்னத்துக்கு வாக்களிப்பது மட்டும்தான். இவ்வாறு அவர் பேசினார்.

பிரசாரத்தில் கூடலூர் நகர செயலாளர் அருண்குமார், கம்பம் ஒன்றிய செயலாளர் இளையநம்பி, மாவட்ட துணை செயலாளர் முருக்கோடை ராமர், த.மா.கா. தலைவர் செல்வேந்திரன், கூடலூர் நகர துணைச்செயலாளர் பாலைராஜா, மாவட்ட பிரதிநிதி திருவாளன், முன்னாள் இளைஞர் பாசறை துணைச்செயலாளர் சேரலாதன், கூட்டுறவு பண்டகசாலை தலைவர் சின்னமாயன், உழவர் கூட்டுறவு வங்கி தலைவர் கரிகாலன், அவைத்தலைவர் துரை, பொருளாளர் நடராஜன், பா.ம.க நகர செயலாளர் ரவி, தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி செயலாளர் ராமு, பா.ஜ.க நகர செயலாளர் வாசகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story