காவலாளியை கொன்று உடலை எரித்த தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை


காவலாளியை கொன்று உடலை எரித்த தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை
x
தினத்தந்தி 2 April 2021 6:36 AM GMT (Updated: 2 April 2021 6:36 AM GMT)

மதுவில் விஷம் கலந்து கொடுத்து காவலாளியை கொன்று உடலை எரித்த தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஊட்டி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

ஊட்டி

மதுவில் விஷம் கலந்து கொடுத்து காவலாளியை கொன்று உடலை எரித்த தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஊட்டி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

காவலாளி கொலை

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள மேல்கரன்சி பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(வயது 48). தனியார் தேயிலை எஸ்டேட்டில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி பூங்கோதை(44). இவர்களுக்கு 17 வயதில் மகன் உள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு ரவிச்சந்திரனுக்கும், பூங்கோதைக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பூங்கோதை, தனது மகன் மற்றும் தம்பி வனராஜ்(40) ஆகியோருடன் சேர்ந்து மதுபானத்தில் விஷம் கலந்து ரவிச்சந்திரனுக்கு கொடுத்தனர். 

அதை வாங்கி குடித்த அவர் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். பின்னர் உடலை மண் எண்ணெய் ஊற்றி எரித்து அவர் வேலை பார்த்து வந்த தேயிலை எஸ்டேட்டுக்கு அருகில் உள்ள பகுதியில் குழி தோண்டி புதைத்தனர்.

கிடுக்கிப்பிடி விசாரணை

இதையடுத்து நீண்ட நாட்களாக ரவிச்சந்திரனை காணாததால், அதுகுறித்து பூங்கோதையை சந்தித்து அவரது அண்ணன் கருத்தபாண்டி கேட்டார். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த அவர், அப்பர் குன்னூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணையை தொடங்கினர்.

பின்னர் பூங்கோதை, அவரது மகன் மற்றும் தம்பி வனராஜ் ஆகிய 3 பேரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் ரவிச்சந்திரனை கொன்று புதைத்தது தெரியவந்தது. பின்னர் புதைக்கப்பட்ட உடல் வெளியே எடுக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

7 ஆண்டு சிறை

மேலும் பூங்கோதை உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அதில் அவரது மகனுக்கு 18 வயதுக்கு கீழ் இருந்ததால் இளம் சிறார் நீதி குழுமத்தில் சேர்க்கப்பட்டான். இந்த கொலை வழக்கு ஊட்டி மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் நேற்று வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி மதுபானத்தில் விஷம் கலந்து கொடுத்து ரவிச்சந்திரனை கொலை செய்த  தொழிலாளியான வனராஜிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை, ரூ.2,000 அபராதம் விதித்து  நீதிபதி அருணாச்சலம் தீர்ப்பளித்தார். 

அபராத தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் போதிய சாட்சிகள் இல்லாததால் பூங்கோதை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். அரசு தரப்பில் வக்கீல் மாலினி ஆஜராகினார்.


Next Story